புதுக்கோட்டை: கீரனூரில் இருந்து அரசு நகர பேருந்து ஒன்று குளத்தூர், ஒடுக்கூர் வழியாக இலுப்பூருக்கு இயக்கப்படுகிறது. ஆனால் இந்த வழித்தடத்தில் காலை மற்றும் மாலை வேலைகளில் இந்த ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுவதால், இதில் அதிக அளவிலான பள்ளி, கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் பணிக்கு செல்லும் பெண்களும் பயணிக்க வேண்டி உள்ளது.
மேலும் பேருந்தில் கூட்டம் அதிகம் இருப்பதால் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கி செல்லும் அவல நிலை தொடர்ந்து வந்தது.
இந்நிலையில் நேற்று மாலை இந்த பேருந்து கீரனூரில் இருந்து இலுப்பூர் நோக்கி புறப்பட்டு, காந்தி சிலை அருகே செல்லும் போது பள்ளி மாணவர் ஒருவர் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்தார்.
இந்த காட்சியை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நல்வாய்ப்பாக அந்த மாணவனுக்கு பெரிய அளவிலான காயம் ஏதும் ஏற்படவில்லை. உடனடியாக பேருந்தை நிறுத்திய ஓட்டுனர் மாணவர்களை பேருந்தின் உள்ளே ஏறுமாறு அறிவுறுத்தினார். இந்த காட்சிகளை பார்த்த அங்கிருந்த காவல்துறையினரும் மாணவர்களை படிக்கட்டில் தொங்க வேண்டாம் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
அதே வேளையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கீரனூரில் இருந்து இலுப்பூர் செல்லும் வழித்தடத்தில் போதிய பேருந்துகள் இல்லாததால் தான் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இனியாவது போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பெரும் அசம்பாவிதங்கள் நிகழ்வதற்கு முன் இந்த வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டுமென, பெற்றோர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தொடரும் மழை; கல்வி நிறுவனங்கள் விடுமுறை