புதுக்கோட்டை: அரியலூர் மாவட்டத்தில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பகுதிக்கு சிமெண்ட் மூட்டை ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு லாரி புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டில் இருந்து சாலை ஓரத்தில் இருந்த டீ கடைக்குள் புகுந்து சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு வேன் மற்றும் ஒரு காரில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து நமணசமுத்திரம் காவல் நிலையத்திற்கு எதிரில் நடந்ததால் உடனடியாக காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், டீ கடையில் டீ அருந்திக் கொண்டும் மற்றும் வேனிலும் ஐயப்ப பக்தர்கள் இருந்துள்ளனர். லாரி வேகமாக இவர்கள் மீது மோதியதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், இதே பகுதியில் இருந்த 19 பேர் பலத்த காயமடைந்த நிலையில் அவர்களை உடனடியாக காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தற்போது அங்கு அவர்களுக்குச் சிகிச்சை நடைபெற்று வருகிறது. மேலும், உயிரிழந்த ஐந்து பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. மேலும், இந்த விபத்து குறித்து நமணசமுத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து ஜேசிபி இயந்திரம் மூலம் விபத்துக்குள்ளான லாரி, வேன் உள்ளிட்டவைகளை மீட்கும் பணியை தீயணைப்புத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து நமணசமுத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காரில் வந்தவர்கள் அனைவரும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த ஐந்து பேரும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, மேல்மருவத்தூர் ஓம் சக்தி கோயில் பக்தர் சாந்தி (55), தேநீர் அருந்தி கொண்டிருந்த, ஓம் சக்தி கோயில் பக்தரான ஜெகனாதன்(60), ஐயப்ப பக்தரான மதுரவாயலைச் சேர்ந்த சுரேஷ்(34), சென்னையைச் சேர்ந்த சதீஷ் (25), திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (26) எனத் தெரியவருகிறது.
மேலும், லாரி மோதியதில் ஐந்து ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கோவையில் பரிதவித்த யானைக்குட்டி.. பத்திரமாக தாயிடம் சேர்த்த வனத்துறையினர்!