பெரம்பலூர் நகர்ப்புறப் பகுதிகளில் பெருகி வரும் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவற்றால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பெரம்பலூர் நகர்ப்புறப் பகுதியைப் பொறுத்தவரையில் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், நான்கு ரோடு, மூன்று ரோடு, சங்கு பேட்டை, வெங்கடேசபுரம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளடங்கியதாகும்.
குறிப்பாக நகர்ப்புறப் பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வணிக வளாகங்கள், விடுதிகள் ஆகியவை உள்ளன. இதனால் இங்குள்ள சாலைகளில் பொதுமக்கள் அதிகளவில் நடந்துச் செல்கின்றனர். அப்படி சாலையில் நடந்துச் செல்லும் பொதுமக்களுக்கு நடைபாதை இல்லாததால் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.
மாவட்டத்தில் சரியாக பேருந்து நிறுத்தம் இல்லாததால் சாலையை மறித்து நின்று பயணிகளை ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் ஏற்றுவதாக குற்றஞ்சாட்டுகிறார் மாதேஸ்வரன், "நகர்ப்புறப் பகுதிகளில் அதிக அளவில் ஷேர் ஆட்டோக்கள் ஓடுகின்றன. பெரம்பலூரில் உள்ள சாலைகளில் முறையாக பேருந்து நிறுத்தம் அமைக்கப்படவில்லை. இதனால் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் சாலையை மறித்து நின்று பயணிகளை ஏற்றுவதால் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாகிறது. எனவே சாலைகளில் பொதுமக்கள் நடந்துச் செல்ல நடைபாதை, பேருந்து நிறுத்தம் ஆகியவற்றை மாவட்ட நிர்வாகம் அமைத்து தர வேண்டும்.
மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் செல்லதுரை தெரிவித்ததாவது, "வளர்ந்து வரும் நகரமாக பெரம்பலூர் மாவட்டம் உள்ளது. புதிய பேருந்து நிலையம் முதல் பழைய பேருந்து நிலையம் வரை உள்ள சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல நடைபாதை இல்லாததால் தற்போது அதிகளவில் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இதுபோதாதென்று சில வணிகர்கள் சாலைகளை ஆக்கிரமித்து வருகின்றனர். இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: கரோனா ஊரடங்கால் தவிக்கும் பெண் ஆட்டோ ஓட்டுநர்: உதவி செய்யுமா அரசு?