பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் அறக்கட்டளை சொற்பொழிவு நடைபெற்றது. இஸ்ரோ அறிவியல் விஞ்ஞானியும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் துணைத் தலைவருமான மயில்சாமி கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், ”தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றம் சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது. இது ஆகஸ்ட்டில் முதல் கட்டமாக தொடங்க உள்ளது.
இதில் அரசுப் பள்ளி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட சிறிய அளவிலான செயற்கைக்கோளை ராட்சத பலூன் மூலம் சுமார் 15 கிலோ மீட்டர் உயரத்திற்கு விண்ணில் செலுத்தும் செயல்பாட்டையும், அது அனுப்பும் படம் மற்றும் சமிக்ஞைகளை தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கவும் பயிற்சி அளிக்கப்படும்.
இந்த பயிற்சியின் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் எதிர்காலத்தில் விண்வெளி திட்டங்களில் இஸ்ரோவுடன் இணைந்து செயல்பட அவர்களுக்கு உத்வேகம் கிடைக்கும்” என்றார்.