மொகஞ்சதாரோ, ஹரப்பா பண்பாடு சொல்லும் தடயங்கள், நமது முன்னோர்கள் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பயிர் சாகுபடி செய்யும் நுட்பத்தை அறிந்துள்ளனர் என்று தெரிவிக்கின்றன. ஆனால், வளர்ச்சி என்ற பெயரில் நிலத்தில் அதிக மகசூல் ஈட்ட வேண்டும் என்பதற்காக விளைநிலத்தைக் கொலை செய்து வருகிறோம். விவசாயிகளின் நண்பனாக இருக்கும் புழுக்களை, பூச்சிக்கொல்லி என்னும் நஞ்சுக்களால் நண்பர்களையே கொலைசெய்து கொண்டிருக்கிறோம்.
இதுபோன்ற காலகட்டத்தில் பலரும் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து வருவது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. பெருவாரியாக மானாவாரி நிலத்தைக் கொண்டது பெரம்பலூர் மாவட்டம். இம்மாவட்டத்தில் சின்ன வெங்காயம், மக்காச்சோளம், சிறுதானிய வகைகள், பூக்கள் உள்ளிட்டவை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. பெரம்பலூரில் தற்போது, இயற்கை விவசாயம் மூலம் சாகுபடி செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
உப்போடை, எளம்பலூர், கீழப்புலியூர், சிறுவாச்சூர், வாலிகண்டபுரம், வேப்பூர், ஓலைப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயற்கை விவசாயம் அதிகளவில் நடைபெற்றுவருகிறது. சிறு துளி பெருவெள்ளம் போல், இயற்கை விவசாயம் மீதான நாட்டம் இளைஞர்கள் முதல் பெரியோர் வரை அதிகரித்துள்ளது.
அந்த வகையில், பெரம்பலூரைச் சேர்ந்த அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர் இயற்கை விவசாயம் செய்து பீடுநடை போட்டுவருகிறார். பெரம்பலூர் நகர்ப்புறப் பகுதியையொட்டிய ஆலம்பாடி சாலையில் வசித்துவருபவர் ஆனந்தராஜ். இவர் குரும்பலூர் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராகப் பணிபுரிந்துவருகிறார்.
ஒரு ஏக்கர் நிலத்தை உதவியாக அளித்த நண்பன்!
இயற்கை விவசாயத்தின் மீது கொண்ட தீராத பற்றாலும், நம்மாழ்வர் விதைத்துச் சென்ற இயற்கை விவசாயத்தின் மீதான புரிதலோடு இவரும் இயற்கை விவசாயம் செய்ய எண்ணினார். தனது மனதில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆசைகளைத் தூவி விட்டிருந்தாலும், விவசாயம் செய்வதற்கு நிலமில்லாமல் தவித்தார். இந்தச் சூழலில், கனவுகளைச் சுமந்துகொண்டு ஏங்கித் தவிக்கும் ஆனந்த்ராஜைப் புரிந்துகொண்ட அவரது நண்பர் வெங்கட், தன்னுடைய ஒரு ஏக்கர் நிலத்தை இயற்கை விவசாயம் செய்துகொள்ள எந்தவித தவணைக் கட்டணம் பெறாமல் அனுமதியளித்தார்.
தரிசு நிலம் வேளாண் பண்ணையாக மாறியது
கடந்த ஒரு வருட காலமாக இயற்கை விவசாயம் செய்து வருகின்றார் ஆனந்தராஜ். தரிசாகக் கிடந்த நிலம், தற்போது நல்ல மகசூல் கிட்டும் பொன் விளையும் பூமியாக மாறியுள்ளது. தொடக்கக் காலத்தில் நாட்டுக் கொத்தமல்லி சாகுபடி செய்து நல்ல மகசூல் கிடைத்ததாக தெரிவிக்கும் ஆனந்தராஜ், தற்போது, பந்தல் சாகுபடி கொடிவகை பயிர்களான புடலங்காய், பீர்க்கங்காய், பாகற்காய் ஆகியவற்றையும், மா, சப்போட்டா, ஆரஞ்சு உள்ளிட்ட பழ மரங்களையும் இயற்கை விவசாய முறையில் ஒருங்கிணைத்து வேளாண் பண்ணையை அமைத்ததாகக் கூறுகிறார்.
இயற்கை விவசாயம் செய்யலாம் வாங்க
”சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு எந்தவித செயற்கை உரமும் இடாமல், மாட்டின் எரு, மண்புழு, பஞ்சகாவியம், மீன் கரைசல் உள்ளிட்ட இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. புடலங்காய், பாகற்காய், பீர்க்கங்காய் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்த 50 நாள்களிலேயே நல்ல மகசூல் தருகின்றன.
பூச்சிகளைக் கட்டுப்படுத்தக்கூடிய இனக்கவர்ச்சி பொறி, வேப்பங்கொட்டை கரைசல் ஆகியவற்றைப் பயன்படுத்தி சாகுபடி செய்தால் புடலங்காய், பாகற்காய், பீர்க்கங்காய் உள்ளிட்ட காய்கறிகள் நல்ல விளைச்சலைத் தருகின்றன. இயற்கை விவசாய முறையில் சாகுபடி செய்வதால் விளைவிக்கும் இடத்திற்கே வந்து மக்கள் வாங்கிச் செல்வதால் நல்ல லாபமும் கிடைக்கிறது.
நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்ய வேண்டும்
வேளாண் சந்தையில் விற்கப்படும் அதே விலைக்கே விற்பனை செய்கிறேன். நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்வதுதான் எனது நோக்கம். பெரம்பலூரில் உள்ள இயற்கை வேளாண் உழவர்கள் குழு மிகுந்த ஒத்துழைப்பு தருவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது” என்கிறார் ஆனந்த்ராஜ்.
ஊரே முடங்கினாலும் உழவன் முடங்குவதில்லை
இயற்கை விவசாயம் இயற்கை வேளாண்மை உழவர்கள் குழு அமைத்து பல்வேறு இயற்கை விவசாயிகளை ஊக்குவித்துவரும் இயற்கை விவசாயி ஆறுமுகம் கூறியதாவது, ”இயற்கை விவசாயத்தைப் பற்றிய புரிதலோடு புதுப்புது விவசாயிகளை உருவாக்க வேண்டும் என்பதே எங்களுடைய குழுவின் நோக்கம். எதிர்கால தலைமுறைக்கு நஞ்சில்லா உணவு அளிக்க வேண்டும்.
ஊரே முடங்கினாலும் உழவன் முடங்குவதில்லை என்பதற்கேற்ப எதிர்கால சந்ததியினரைக் காக்க இயற்கை விவசாயம் செய்ய வேண்டும். இந்த ஊரடங்கு காலத்திலும் சிறிய வகை மாடித்தோட்டம் அமைப்பது, கீரை சாகுபடி செய்வது என நமக்கான தேவைகளை நாமே உற்பத்தி செய்ய இளைஞர்கள் முன்வர வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: 'ராஜா ராணியாக நடித்தாலும் நலிந்து கிடக்கிறது எங்கள் வாழ்க்கை' - வறுமையின் பிடியில் நாட்டுப்புறக் கலைஞர்கள்