பெரம்பலூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவத்திற்கு இடம் கிடைக்காததால் தற்கொலை செய்துகொண்ட மாணவி கீர்த்தனாவின் வீட்டிற்குச் சென்று, அவரது திருவுருவப் படத்துக்கு மலர் தூவி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மரியாதை செலுத்தினார். மேலும், அவரது பெற்றோருக்கு ஆறுதலும் கூறினார்.
இதனையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’இரண்டாவது முறையாக பாஜக அரசு மிகப்பெரிய மிருக பலத்தோடு ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாஜகவுக்கு அதிகமாக உள்ளதால், அந்த பலத்தைப் பயன்படுத்தி ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் ஒரு சர்வாதிகார ஆட்சி நடத்திவருகின்றனர்.
இந்த ஜனநாயக நாட்டிற்கு உரிய எந்த பண்பும், இந்த ஆட்சியில் இல்லை. நாடாளுமன்றத்தில் காஷ்மீர் பிரச்னை முதல் 35 நாட்களில், 32 மசோதாக்கள் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. சர்வாதிகார நாட்டில் என்ன நடைபெறுமோ, அது இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நீட் தேர்வு விவகாரத்தில், மத்திய அரசாங்கம் மேற்கொள்கின்ற வஞ்சக போக்கிற்கு, மாநில அரசு துணை போவது கண்டனத்துக்குரியது. இந்த நீட் தேர்வினால் இதுவரை பெரம்பலூர் கீர்த்தனா உள்ளிட்ட 7 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த ஏழு பேரின் தற்கொலைக்கு, மத்திய மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். அவர்களின் குடும்பத்தினருக்குத் தக்க நிதியுதவி அளிக்க வேண்டும்” என்றார்.