பெரம்பலூர் மாவட்டத்தில், கரோனா நோய்த் தொற்றுக்கு இதுவரை 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, நேற்று நோய்த்தொற்று கண்டறியப்பட்ட 20 பேர் வசித்த கிராமங்களுக்கு இன்று முதல் 3 நாள்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் புதிதாக நோய் கண்டறியப்பட்ட நல்லரிக்கை, கொளத்தூர், இலுப்பைக்குடி, திம்மூர், அருநகிரிமங்கலம், சில்லகுடி, புது வேட்டக்குடி, கீழப்பெரம்பலூர், நன்னை உள்ளிட்ட கிராமங்களுக்கு மே 4ஆம் தேதி முதல் மே 6ஆம் தேதிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் அப்பகுதியைச் சேர்ந்த எவரும் வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் வெளிநபர்களும் அப்பகுதிகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிர்வாக அறிவிப்பினை மீறி கடைகளை திறந்தால் உடனடியாக சீல் வைக்கப்பட்டு சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் நோயின் தீவிரம் அறிந்து விழிப்புடன் செயல்பட்டு ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சாந்தா கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க:கோயம்பேட்டில் இருந்து பரவிய கரோனா!