பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மேற்கு வானொலி திடலில், அம்மாவட்ட அதிமுக மாணவரணி சார்பாக மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், மாவட்ட மாணவரணி செயலாளரும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினருமான தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு குன்னம் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், ' மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு அமைதியாக வீரவணக்கம் செலுத்த வேண்டும். ஆனால், பெரம்பலூரில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வெடி வெடித்து கொண்டாடியுள்ளனர். வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தை நடத்துவதற்கு தகுதியுள்ள ஒரே கட்சி அதிமுக தான் ' என்று தெரிவித்தார்.
மேலும் குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மக்களிடையே பொய்யான பரப்புரையில் ஈடுபட்டு வருவதாகவும், அதனை மக்கள் யாரும் நம்ப மாட்டர்கள் எனவும் தமிழ்ச்ச்செல்வன் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக கட்சியைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: சொத்துக்காக தந்தையை வீட்டை விட்டு துரத்திய மகன்!