பெரம்பலூர் அருகே உள்ள புது வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது தந்தை வரதராஜன் மற்றும் குடும்பத்தினர் காட்டு கொட்டகை பகுதியில் வசித்து விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களின் வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் பசு ஒன்று இன்றோ அல்லது நாளையோ கன்றினை பிரசவிக்கும் நிலையில் இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக மேய்ச்சலுக்கிடையே அங்குள்ள 60 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்தது. இதில் 10 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்ததால் உள்ளே விழுந்த பசு உயிருக்குப் போராடியது.
இதனிடையே துரிதமாக முடிவெடுத்த ரவி, பசுவை மீட்க உடனடியாகத் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து விட்டு அடுத்த நொடியே கால்நடை மருத்துவருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி சினைப் பசுவை மீட்டு வெளியே எடுத்தனர். மீட்கப்பட்ட பசுவிற்கு கால்நடை மருத்துவர்கள் தீவிர முயற்சி எடுத்து பிரசவம் பார்த்தனர். அதை தொடர்ந்து அந்த பசு கன்றை ஈன்றது.
பசு உயிருடன் மீட்கப்பட்டு கன்றை பிரசவித்த செய்தி கேட்டு அக்கிராம மக்கள் மற்றும் அலுவலர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.