பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் சாத்தனூர் குடிக்காடு கிராமத்தில் சூழலியல் செயற்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா மற்றும் சாத்தனூர் ஊராட்சி மன்ற உறுப்பினர் சுகுமார் உள்ளிட்டோர் கள ஆய்வின் போது வயல் வெளி பகுதியில் சிதைந்த நிலையில் (ஜேஸ்டா தேவி) தவ்வை நடுகல்லை கண்டெடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே வாலிகண்டபுரம், வரகூர், துங்கபுரம், மற்றும் வெண்பாவூர் ஆகிய ஊர்களில் தவ்வைத்தாய் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதேபோன்று, 5ஆவது ஊராக சாத்தனூர் குடிக்காட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தவ்வைத்தாய் (ஜேஸ்டா தேவி) பற்றிய குறிப்புகள்: தமிழில் தவ்வைத்தாய் எனப்படும் இந்த சிற்பம் சமஸ்கிருதத்தில் ஜேஸ்டா தேவி என்று அழைக்கப்படுகிறது. மங்களத்தின் அடையாளமாகவும், செல்வ செழிப்பின் அடையாளமாக திகழ்ந்த தவ்வைத்தாய் வழிபாடு பல்லவர் காலத்தில் தொடங்கியதாகவும், பிற்கால சோழர்கள் காலத்தில் இந்த வழிபாடானது சற்று தேய தொடங்கியதாகவும், நாயக்கர் காலத்தில் முற்றிலுமாக வழிபாடு நடைபெறாமல் "அமங்கலத்தின் சின்னமாக கருதப்பட்டு நாளடைவில் ஆறு, ஏரி, குளம், வயல்வெளிகள் தூக்கி வீசப்பட்டதாகவும், ஒரு சில கோயில்களில் மட்டும் வழிபாடு செய்யப்படுவதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இவ்வகை அடையாளத்துடன் பெரம்பலூர் அருகே சாத்தனூர் குடிக்காடு வயல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தவ்வைத்தாய் சிலை அமைப்பானது நடுவில் இரு கரங்களோடும், வலது பக்கம் மாட்டு தலையுடன் (ஆண்) ஜேஸ்டா தேவி மகன் (மாந்தன் சிலையும் ) இடது பக்கம் (பெண்) ஜேஸ்டா தேவி மகள் (மாந்தி) சிலையும் காணப்படுகிறது. தற்போது கண்டெடுக்கப்பட்ட தவ்வைத்தாய் சிலையானது 13ஆம் நூற்றாண்டை சேர்ந்தது எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மக்கள் ஒத்துழைக்காவிடில் ஊரடங்கு தவிர்க்க இயலாததாக மாறி விடும் - அமைச்சர் செல்லூர் ராஜு