நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அடுத்துள்ள புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், அவர்களது பகுதியில் வைத்திருந்த விநாயகர் சிலையை காவிரி ஆற்றில் கரைக்க லாரியின் மூலம் மோகனூர் எடுத்துச் சென்றுள்ளனர். ஆற்றில் சிலையைக் கரைக்கும் போது அங்கிருந்த முத்துகாப்பட்டியைச் சேர்ந்தவர்கள் சிலர், புதுப்பாளையத்தை சேர்ந்தவர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து புதுப்பாளையத்தை சேர்ந்தவர்கள் உடனடியாக அங்கிருந்து கிளம்பி லாரி மூலம் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
பின்பு, லாரி கொண்டிசெட்டிபட்டி அருகே சென்றுகொண்டிருந்த போது, ஆட்டோவில் வந்த முத்துகாப்பட்டி கும்பல் லாரியை மறித்து லாரியின் கண்ணாடியை உடைத்து, லாரியில் இருந்த பொதுமக்கள் மீது செங்கல், தென்னை மட்டை, கோயிலில் பயன்படுத்தப்படும் மணி உள்ளிட்டவற்றைக் கொண்டு கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் காவல் துறையினர், தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரை துரத்தி பிடித்தனர். பின்பு, தாக்குதலில் காயமடைந்த 4 பெண்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோரை சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.