பெங்களூரிலிருந்து நாமக்கல் வழியாக மதுரைக்கு காய்கறி பெட்டிகளுடன் வந்த லாரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி செல்லப்படுவதாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து நல்லிபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராதா தலைமையில், காவல் துறையினர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முதலைப்பட்டி மேம்பாலத்தின் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுரை நோக்கிச் சென்ற லாரியை சோதனை செய்த போது காய்கறிகளை நிரப்பிச் செல்லும் பெட்டிகளில் காய்கறிகள் ஏதுமில்லாமல் இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்தனர். பின்னர் தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர், பெட்டிகளுக்கு நடுவே மூட்டை, மூட்டையாகத் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
பின்பு லாரியை ஓட்டி வந்த டிரைவர்கள் சந்தோஷ்குமார், விஜயகுமார் ஆகிய இருவரையும் கைது செய்தது மட்டுமல்லாமல் 10,755 ஹான்ஸ் பொட்டலங்கள், 2507 புகையிலை பொருட்கள் என 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களையும், லாரியையும் நல்லிபாளையம் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
அதன்பின் கைது செய்யப்பட்ட இருவரிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், பெங்களூரிலிருந்து வந்த லாரியை தொப்பூர் வரை ஒரு ஓட்டுநரும், தொப்பூரிலிருந்து மதுரை வரை இந்த இரண்டு ஓட்டுநர்களும் லாரியை ஓட்டியது தெரியவந்தது. தற்போது அவர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.