நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பாளைபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன் (32). பட்டதாரி இளைஞரான இவர், வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.15 லட்சம் மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக சிறை சென்று கடந்த மூன்று மாதத்திற்கு முன்புதான் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 7) மதியம் அரிவாளுடன் சாலையில் திரிந்த கோடீஸ்வரன், தனது பெரியப்பா, பெரியண்ணனையும் அரிவாளால் வெட்டினார்.
அப்போது, இதனை தட்டிக்கேட்ட அவருடைய அத்தை லட்சுமியையும் அரிவாளால் வெட்டினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நரேஸ்குமார் என்பவரையும் துரத்திச் சென்று வெட்டிவிட்டு வீட்டினுள் கோடீஸ்வரன் பதுங்கி கொண்டார். இதில் படுகாயமடைந்த பெரியண்ணன், நரேஷ்குமார் ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் ராசிபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுச்சத்திரம் காவல்துறையினர் வீட்டினுள் இருந்த கோடீஸ்வரனிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர் வெளியே வர மறுத்தார். புதுச்சத்திரம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் இளைஞர் இருந்த அறையில் மிளகாய்பொடி, ஸ்பிரே அடித்து மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு கோடீஸ்வரனை பிடித்தனர். கைது செய்யப்பட்ட கோடீஸ்வரனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அங்கோடா லொக்கா யார்? மரணத்தில் இருக்கும் சந்தேகம் என்ன? வழக்கின் போக்கு...