நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் குழந்தைகளை விற்பனை செய்தது தொடர்பாக ஓய்வு பெற்ற செவிலி அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். பின்னர் இந்த வழக்கு பின்னர் சிபிசிஐடி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின் சேலத்தை சேர்ந்த மற்றொரு செவிலியும் கைது செய்யப்பட்டார்.
தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த ராசிபுரம் குழந்தைகள் விற்பனை சம்பவம் தொடர்பாக இன்று மேலும் ஒரு இடைத்தரகரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் பெங்களூரை சேர்ந்த ரேகா என்பதும், அவர் பெண்கள் அழகு நிலையம் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இவர் இதுவரை 18 குழந்தைகள் விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பின்னர் காவல் துறையினர் ரேகாவை, நாமக்கல் இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது ரேகாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கவும், மீண்டும் ரேகாவை மே 31ஆம் தேதி ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ரேகா சேலம் மத்திய சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.
இந்த வழக்கில் ஒரு இடைத்தரகர் சிக்கியிருப்பதால், மேலும் இதில் தொடர்பு இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.