நாமக்கல் மாவட்டத்தில் அத்தியாவசியத் தேவையின்றி சாலையில் சுற்றித் திரியும் வாகன ஓட்டிகளை கண்காணிக்க காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (ஜூன்.10) இருசக்கர வாகனத்தில் மூட்டைப் பையுடன் நின்ற இருவரை பிடித்து காவல் துறையினர் விசாரித்தனர். பின்னர், பையினை சோதனையிட்டபோது அதில் கர்நாடகா மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் நாமக்கல்லைச் சேர்ந்த சக்திவேல், சங்கர் என்பது தெரியவந்தது.
இதேபோல் புதுச்சத்திரம் அடுத்த களங்காணி பகுதியில் லாரியிலிருந்து ஆம்னி வேனில் மூட்டைகளை மூன்று பேர் மாற்றிக் கொண்டிருந்ததைக் கண்ட காவல் துறையினர் அவர்களை சோதனையிட்டபோது, கர்நாடகா மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் திருச்செங்கோட்டைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கோபாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, கோபிநாத் எனத் தெரிவந்தது.
இதையடுத்து, அவர்கள் ஐந்து பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், ஊரடங்கால் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை பயன்படுத்திக் கொண்டு கர்நாடகாவிலிருந்து குறைந்த விலை மது பாட்டில்கள்களை வாங்கி வந்து ஒரு பாட்டிலை ஆயிரம் முதல் மூன்றாயிரம் ரூபாய் வரை விற்பனை செய்து லாபம் பார்த்தது தெரியவந்தது.
பின்னர் இவர்கள் ஐந்து பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து 210 மது பாட்டில்கல்களையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.