நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அக்கரைப்பட்டிபாளையம் பகுதியில் ஸ்ரீசாய்பாபா பாலிடெக்னிக் கல்லூரி கடந்த 2016ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 2016 முதல் 2019ஆம் ஆண்டுவரை இந்த கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் மற்றும் ஏர் கிராப்ட் மெயின்டனன்ஸ் இன்ஜினியரிங் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் பத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வந்தனர்.
மூன்றாம் பருவ தேர்வுகள் வரை முறையாக நடத்திய கல்லூரி அதன் பிறகு பருவ தேர்வுகள் மட்டுமே நடத்தியிருந்தது. செய்முறை தேர்வுகள் நடத்துவதற்கு கல்லூரி நிர்வாகத்திடம் வசதி இல்லாத காரணத்தால் அந்த தேர்வை நடத்தாமல் தள்ளிப்போட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மூன்றாண்டுகள் படிப்பு நிறைவு பெற்ற பிறகும் செய்முறை தேர்வுகள் எதுவும் நடத்தப்படாததால் அந்த மாணவர்கள் பட்டயங்களைப் பெறமுடியாத சூழலில் இருப்பதாகக் கூறுகின்றனர்.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜிடம் மாணவர்கள் புகார் மனு அளித்தனர். பின்னர் மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்ட ஆட்சியர், வருகின்ற 24ஆம் தேதி கல்லூரி தரப்பிலிருந்தும் மாணவர்கள் தரப்பிலிருந்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய கல்லூரி மாணவி ரூபி, 'செய்முறை தேர்வுகளை விரைந்து நடத்த நிர்வாகத்திடம் பலமுறை எடுத்துக்கூறியும் தக்க நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தில் புகார் செய்தபோது செய்முறை தேர்வு எழுத சரியான வசதி இல்லாத காரணத்தால் கல்லூரி நிர்வாகம் சார்பாக மின்னஞ்சல் அல்லது கடிதம் வாயிலாக வேறு கல்லூரியில் தற்போது உள்ள மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகளை நடத்தக் கோரிக்கை விடுத்தால் அதனை நிறைவேற்றித் தருவதாக கூறியுள்ளனர்.
இதனை மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்தும் கல்லூரி சார்பாக கடிதம் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளனர். அதன்காரணமாக தங்களுக்கு செய்முறை தேர்வுகளை வேறு கல்லூரியில் நடத்த வழிவகை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்' என தெரிவித்தார்.
இதையும் படியுங்க:
பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகம்!