சரக்கு போக்குவரத்தில் முக்கிய கேந்திரமாக விளங்கி வரும் நாமக்கல் மாவட்டம் ஊரடங்கு உத்தரவால் முடங்கி கிடக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் லாரி, டெம்போ, சரக்கு ஆட்டோ என 55 ஆயிரம் சரக்கு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் கடந்த 22 நாள்களாக இயக்கமால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் ஓட்டுனர்கள், உதவியாளர்கள், பணிமனை பழுது பார்ப்பவர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் என நேரிடையாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர்.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டித்துள்ள நிலையில் உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு வழியில்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ள நிலையில் தங்களை போன்ற லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுவருவதாகவும், லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தங்களுக்கு எவ்வித வருமானமும் இல்லாமல் குடும்பத்தை எவ்வாறு காப்பது என தெரியாமல் தவித்து வருவதாக கூறுகின்றனர்.
மேலும், மத்திய அரசு வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தழணை தொகையை மூன்று மாதங்களுக்கு தள்ளி வைத்துள்ளது எவ்வித பயனும் இல்லை எனவும் வேதனை தெரிவிக்கிறார் லாரி உரிமையாளர் துரைசாமி.
ஊரடங்கால் வேலை இழந்துள்ள நிலையில் தங்களைப் போன்ற ஏழை தொழிலாளர்களின் குடும்பங்கள் மிகவும் சிரமப்படுவதாகவும், தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் நிதி போதாது எனவும் மற்றவரிடம் கையேந்தி நிற்கும் நிலைக்கு லாரி ஓட்டுநர்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
லாரிகள் இயங்காத நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரி பட்டறைகளும் மூடப்பட்டுள்ளன. இதில் பணியாற்ற கூடிய 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.ஊரடங்கை வரவேற்கிறோம் இருப்பினும் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு உதவ வேண்டும் என தெரிவிக்கிறார் நாமக்கல்லை சேர்ந்த லாரி பட்டறை உரிமையாளர் குமார்.
நகர்களையும் மாவட்டங்களையும் மாநிலங்களையும் இணைத்த லாரிகள் இன்று ஊரடங்கால் ஓய்ந்திருக்கும் நிலையில் அதை சார்ந்துள்ள தொழிலாளர்களின் வாழ்வை உயிர்ப்பிக்க மத்திய, மாநில அரசுகள் உதவ முன்வருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.