நாமக்கல் மாவட்டத்தை அடுத்துள்ள கூலிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (40). இவர் பட்டறைமேடு பகுதியில் ஸ்டிக்கர் கடை நடத்திவந்தார். இந்நிலையில், கடந்த 1ஆம் தேதி கூலிப்பட்டி அருகே அவர் வெட்டிப் கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த நாமக்கல் காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடிவந்தனர். இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த நிவாஸ், சஞ்சீவி, பாண்டியராஜன், சரவணன் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கொலை செய்யப்பட்ட ஜெயக்குமாரிடம் சஞ்சீவி கடந்தாண்டு தனது இருசக்கர வாகனத்தை அடமானம் வைத்து 15 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றதாகக் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் சஞ்சீவி வாங்கிய கடனை திருப்பிச் செலுத்திவிட்டு ஜெயக்குமாரிடம் தான் அடகு வைத்த இருசக்கர வாகனத்தை திருப்பிக் கேட்டுள்ளார்.
ஆனால், ஜெயக்குமார் வாகனத்தை திருப்பித் தராமல் காலம்தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த மாதம் 30ஆம் தேதி இரவு மது அருந்தும்போது ஜெயக்குமாருக்கும், சஞ்சீவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து சஞ்சீவி தனது நண்பர்களான நிவாஸ், பாண்டியராஜன், சரவணன் ஆகியோருடன் சேர்ந்து ஜெயக்குமாரை தலை, கழுத்து பகுதியில் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து, சஞ்சீவி, நிவாஸ், பாண்டியராஜன், சரவணன் ஆகிய நான்கு பேரை கைது செய்த காவல் துறையினர், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்து பின்னர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:ஸ்டிக்கர் கடை உரிமையாளர் வெட்டிப் படுகொலை - காவல் துறை விசாரணை