நாமக்கல் மாவட்டத்தில் எருமப்பட்டி, வளையப்பட்டி, சேந்தமங்கலம், புதுசத்திரம், ராசிபுரம், வெண்ணந்தூர் உள்ளிட்ட வட்டார பகுதிகளில் ஆண்டுதோறும் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்தாண்டும், வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில், தொடர் மழை காரணமாக வேர் அழுகல் நோயும், பனிப்பொழிவு காரணமாக இலை கருகல் நோயும் தாக்கி வெங்காய விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது, சின்ன வெங்காயம் கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையாகும் நிலையில், வெங்காய பயிர்கள் நோயால் பாதிக்கப்பட்டது விவசாயிகளைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், பயிர்களை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வு செய்து இடைக்கால நிவாரணமாக ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும். மத்திய குழு பார்வையிட நடவடிக்கை எடுக்க வேண்டும், வெங்காயத்திற்கும் பயிர் காப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வளையப்பட்டி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தைச் சேர்ந்த விவசாயிகள், வளையப்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விவசாயிகள் நோயால் பாதிக்கப்பட்ட வெங்காய பயிர்களைக் கையில் ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: இடதுசாரி மாணவ அமைப்புகள்-போலீஸ் இடையே மோதல்!