நாமக்கல் மாவட்டத்தில் ’விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற திமுகவின் நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் கனிமொழி இரண்டு நாள்களாக பரப்புரையில் ஈடுபட்டார்.
தொடர்ந்து, நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர் சம்மேளனத்தினருடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இதில் தொழில் நலிவடைந்துள்ளதாகவும், அதை மேம்படுத்த உதவ வேண்டும் எனவும் லாரி உரிமையாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
ஆலோசனைக்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகள் திமுக ஆட்சிக்கு வந்ததுடன் பரிசீலனை செய்யப்படும். உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயராமல் குறைந்துகொண்டு வரும் நிலையில், காரணமே இல்லாமல் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
அனைத்து வகையான பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. கரோனா சூழலில் விலைவாசி உயர்வு பொதுமக்களை கடுமையாக பாதித்துள்ளது. இதனைப் புரிந்துகொண்டு மத்திய அரசு விலையை குறைக்க வேண்டும்” என்றார்.
உண்மையில் தமிழ்நாடு வெற்றிநடை போடுகிறதா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “தமிழ்நாட்டில் 23 லட்சம் இளைஞர்கள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். புதிய முதலீடுகளும் இல்லாத நிலையில் பல தொழில் நிறுவனங்கள் மூட வேண்டிய நிலை அடைந்துள்ளது. இப்படி, மக்கள் பிரச்னைகள் அதிகமாக உள்ள தமிழ்நாடு எவ்வாறு வெற்றிநடை போடும்’எனமக்களவை உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க:'தெளிவான முடிவுக்காக தேமுதிக காத்துக்கொண்டிருக்கிறது'- பிரேமலதா விஜயகாந்த்