மண்ணென்றாலும், பொன்னென்றாலும், காயென்றாலும், கனியென்றாலும் ஒவ்வொன்றிற்கும் தமிழ் மரபில் தனித்தனி அடையாளமுண்டு. இயற்கையோடு பிணைந்த வாழ்வியல் தமிழர்களுடையது. அதில், முக்கிய இடம் வகிக்கிறது, முக்கனி.
அதிலொரு கனியான வாழைப்பழம், சமய விழாக்கள் தொடங்கி ஆரோக்கியம் வரையிலும் அளப்பரிய பங்காற்றுகிறது. குறைந்த விலையில் கிடைக்கும் மஞ்சள் தங்கமென்றே வாழைப்பழங்களைக் குறிப்பிடலாம். அவ்வளவு சத்து மிகுந்தது. ஆனால், தற்போது பரவிவரும் கரோனா பெருந்தொற்று மக்கள் இயல்பு வாழ்க்கையில் மட்டுமின்றி, வாழைப்பழ சாகுபடியிலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள ஜேடர்பாளையம் தடுப்பணை முதல் மோகனூர் வரையிலான காவிரி கரையோர பகுதிகளில் சுமார் ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் வாழை விவசாயம் செய்யப்பட்டுவருகிறது. இந்த பகுதிகளில் விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டுவருகின்றன.
சுற்றுவட்டார விவசாயிகள் நேரடியாகவே, பரமத்திவேலூர் வாழைசந்தையில், வாழைத்தார்களை விற்பனை செய்துவருகின்றனர். இந்நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களிலிருந்து வாகனங்கள் வர தடைவிதிக்கப்பட்டது. மக்களிடையே பொருளாதார இறுக்கம் அதிகரித்தது.
இதுபோன்ற சிக்கல்களால் வாழை சந்தை மூடப்பட்டது. பரமத்திவேலூர் பழைய நெடுஞ்சாலையில் வாழைதார்கள் விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. இருப்பினும், பிற மாநில, மாவட்ட வியாபாரிகள் வரத்தில்லாமல் விற்பனை மந்தமான நிலைக்கு வந்தது. குறிப்பாக, விலை வீழ்ச்சியடைந்த பின்னரும்கூட விற்பனையில் முன்னேற்றமில்லை.
இதுகுறித்து, விவசாயி சுப்பிரமணியன் கூறுகையில், "ஊரடங்கு உத்தரவால் வாழைத்தார்களை விற்பனை செய்யமுடியாமல் தவிக்கிறோம். வெளிமாவட்ட வியாபாரிகள் வருவதற்கு அச்சப்படுகின்றனர். இதனால், வாழைத்தார்களின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக, வாழைத்தார்களை அறுவடை செய்யாமல் மரங்களிலேயே விட்டுவிடும் சூழல் நிலவுகிறது. கண்ணெதிரே பழங்கள் தானாக பழுத்து உதிர்ந்துவிழுகின்றன. ஒரு நாளுக்கு 50 லட்சம் மதிப்பில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. விவசாயிகளின் அவலநிலையை சீர்படுத்த மாநில அரசு நடவடிக்கைஎடுக்க வேண்டும். வெளிமாவட்டங்கள், அண்டை மாநிலங்களுக்கு வாழைத்தார்கள் எடுத்து செல்ல அனுமதி வழங்க வேண்டும்" என கோரிக்கைவிடுத்தார்.
ஊரடங்கால் வருவாயிழந்த விவசாயக் கூலி சுப்பிரமணி கூறும்போது, எப்பொழுதுமில்லாத அளவிற்கு வாழை விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வாழைத்தார்களை அறுவடை செய்ய முடியாமல் திணறிவருகின்றனர். பொருளாதார பின்னடைவினால், விவசாயிகள் கூலிக்கு ஆட்களை அழைப்பதில்லை. அப்படியே, அழைத்தாலும் கூலி கொடுப்பதில்லை, என வேதனைதெரிவித்தார்.
இதையும் படிங்க: பிரியாணிக்காக அடம்பிடித்த கரோனா நோயாளி!