கொல்லிமலையை ஆண்ட கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னனைப் போற்றும் வகையில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1, 2 ஆகிய தேதிகளில் வல்வில் ஓரி விழா நடத்தப்பட்டுவருகிறது. இந்த விழாவையொட்டி மலர் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், மாநில அளவிலான வில்வித்தைப் போட்டிகள் ஆகியவை நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், நாமக்கல் ஆட்சியர் மெகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தற்போது கரோனா தொற்று பரவாமல் தடுக்க ஜூலை 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், 144 தடை உத்தரவும் அமலில் உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் 1, 2 ஆகிய தினங்களில் வல்வில் ஓரி விழா நடத்த இயலாத சூழல் உள்ளதால், இவ்வாண்டு அவ்விழா நடைபெறாது. மேலும் மலர் கண்காட்சி, கலைநிகழ்ச்சிகள், வில்வித்தைப் போட்டி உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளும் நடத்தப்படாது.
மேலும் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்கள், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் என யாரும் கொல்லிமலைக்கு வர வேண்டாம் எனவும், மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பினை மீறி வருவோர் மீது 144 தடை உத்தரவுச் சட்டம், தொற்று நோய் தடுப்புச் சட்டம், பேரிடர் மேலாண்மைச் சட்டம், ஆகியவற்றின்கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதோடு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.