நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர் கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் சித்திக் தலைமையில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் விருப்ப ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அலுவலருமான சசிகாந்த் செந்தில் கலந்துகொண்டு பேசினார்.
அதில், “வரும் சட்டப்பேரவைத் தேர்தலின்போது அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு கட்சித் தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வதோடு, கூட்டணி கட்சியின் வேட்பாளர்களின் வெற்றிக்கும் பாடுபட வேண்டும்” எனப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகாந்த் செந்தில், “நாட்டின் மீது பெரிய தாக்குதல் நடைபெற்றுவருகிறது. இந்த அபாயத்தைப் புரிந்துகொள்ளாவிடில் நாம் பார்த்த இந்தியா, நாம் வாழ்ந்த இந்தியா அமைதியும் நல்லிணக்கமும் அற்றுப்போய்விடும். இது இல்லாவிடில் எவை இருந்தும் பயனில்லை.
மேலும், நாட்டில் வாழும் ஐந்து விழுக்காடு மக்கள் மட்டுமே எல்லா வளங்களையும் அனுபவிக்கும் வகையில் சட்டமும், அரசும் துணைபுரிகின்றன. ஏழை மக்கள் எங்கே போவார்கள். சர்வாதிகாரிகள் உலகம் முழுவதும் தாங்கள் ஆட்சிக்கு வர ஊழலை கையில் எடுப்பார்கள். ஆனால் பசி, பட்டினி, வன்முறை பற்றி அவர்கள் பேசவே மாட்டார்கள்.
பாஜக, ஆர்எஸ்எஸ், மோடி ஆகிய மூன்றும் சேர்ந்தது சூழ்ச்சி. வரும் தேர்தலில் தீயசக்தி உள்ளே வராமல் தடுக்க வேண்டும். அதற்கு வரும் தேர்தலில் நல்லவர்களும், உண்மையானவர்களும் வெற்றிபெற அனைவரும் வாக்களிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் சசிகலா - அமைச்சர் ஜெயக்குமார்