நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளராக இருப்பவர் அஜித்தன். இவர் தனது தோட்டத்தில் உள்ள 30 அடி ஆழம் கொண்ட கிணற்றிற்கு பெற்ற இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தி, காவிரி ஆற்றிலிருந்து சட்டவிரோதமாகத் தண்ணீரைத் திருடி விற்பனை செய்துவந்துள்ளார்.
இதனையடுத்து மோகனூர் மின்வாரிய உதவிப் பொறியாளர் அருண் தலைமையிலான மின்வாரிய பணியாளர்கள், விவசாய நிலத்திற்குச் சென்று நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இலவச மின்சாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி அஜித்தன் ஆற்றில் தண்ணீர் எடுத்துவந்தது உறுதியானது.
இதனையடுத்து சட்டவிரோதமாக இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தியதால் மின் இணைப்பைத் துண்டித்த மின்வாரிய அலுவலர்கள், அஜித்தனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசும் வழங்கினர்.
இது குறித்து மோகனூர் மின்வாரிய உதவி பொறியாளர் அருணிடம் கேட்டபோது, இலவச மின்சாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டதின்பேரில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், முதன்முறையாக முறைகேடு கண்டறியப்பட்டதால் எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.