கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த வருமான வரித்துறையில் பணியாற்றி வரும் பாரதி என்பவர் தனது மாருதி எஸ்டீம் கார் மூலம் தனது மனைவி,குழந்தையுடன் இன்று(பிப்.10) நாமக்கல்லில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார்.
இவர் முதலைப்பட்டியில் உள்ள தனியார் கேஸ் பங்க்கில் தனது காருக்கு எரிவாயு நிரப்பிவிட்டு காரை வெளியே எடுத்துச் செல்லும் போது எதிர்பாராத விதமாக கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக காரை நிறுத்திய பாரதி, அவரது மனைவியும் காரில் இருந்து வெளியேறினர்.
பின்னர் அருகிலிருந்தவர்கள் காரை கேஸ் பங்க்கில் இருந்து வெளியேற்றி சாலையில் நிறுத்தி நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்பு துறையினர், கொளுந்து விட்டு எரிந்த தீயை அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர்.
இதையடுத்து, சம்பவம் குறித்து நல்லிபாளையம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேஸ் பங்கில் ஏற்பட்ட தீ விபத்து உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதையும் படிங்க:
மயிலாடுதுறையில் ஒன்பதாவது நாளாக தொடரும் அரசு ஊழியர்கள் போராட்டம்!