சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் நோக்கத்தில் பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தை மத்திய அரசு நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தியுள்ளது. பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை திட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தமிழ்நாட்டு விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளதாகவும், இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் தமிழ்நாடு வேளாண்மைத் துறையும் அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில், கிசான் திட்டத்தின் முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவினர் சார்பில் இன்று (செப்.07) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் கிசான் திட்டத்தில் போலியாகப் பதிவுசெய்தவர்களை உடனடியாக கண்டறிய வேண்டும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மேலும் பாஜகவினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இந்தக் கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவினையும் அளித்தனர். இதில் அக்கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: கிசான் முறைகேடு: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்