சென்னை: எதிர்க்கட்சியினரின் சிந்தனையில் குறைபாடு இருப்பதால் அரசை குறை சொல்வதாக விழுப்புரத்தில் புதிய திட்டங்கள் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், வழுதரெட்டியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம் மற்றும் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 சமூகநீதிப் போராளிகளின் நினைவாக ரூ5.70 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபம் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். வழுதரெட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.133 கோடி மதிப்பிலான 116 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதோடு, ரூ.425 கோடியில் 231 முடிவுற்ற திட்டப் பணிகளையும் தொடங்கி வைத்து, ரூ.324 கோடியில் 35,003 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பிற்படுத்தப்பட்டோருக்கு 20% இட ஒதுக்கீடு: நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,"விழுப்புரத்துக்கு எத்தனையோ இலக்கிய, வரலாற்று பெருமைகள் உள்ளன. நல்லாட்சியின் இலக்கணமாக திகழ்ந்தவர் ஒமந்தூரார் ராமசாமி ரெட்டியார். திராவிட அரசியலின் அடையாளமாகத் திகழ்ந்தவர் ஏ.கோவிந்தசாமி. இப்படி விழுப்புரம் மண்ணின் பெருமைகள் ஏராளமாக உள்ளன. திமுக தேர்தல் அரசியலுக்கு வரும் முன்பு திமுகவின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கு கட்சி ஆதரவு அளித்தது. அப்படி திமுகவின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு முதன் முதலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஏ.கோவிந்தசாமி. அண்ணா, கருணாநிதி அமைச்சரவையில் இடம் பெற்றார்.
1987ஆம் ஆண்டு இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்திய போது அவர்கள் மீது, அதிமுக அரசு துப்பாக்கி சூடு நடத்தித்தியது. இதில் 21 பேர் உயிரிழந்தனர். அதன் பின்னர் 1989ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் கருணாநிதி மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் உத்தரவை வெளியிட்டார். இப்போது கல்வி, வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பல்வேறு முன்னேற்றங்களை அடைந்து வருகின்றனர். அதற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கொடுத்த இடஒதுக்கீடுதான் காரணம். இட ஒதுக்கீடு போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 21 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. மாதம் தோறும் ரூ.3000 உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. திமுக ஆட்சியில், நான் சென்னை மேயராக இருந்த போது ஹால்டா சந்திப்பில் ராமசாமி படையாச்சியாருக்கு சிலை அமைக்கப்பட்டது.
நந்தன் கால்வாய் திட்டம்: இப்போது 1987ஆம் ஆண்டு இட ஒதுக்கீடு கேட்டு போராடி உயிர் நீத்த சமூக போராளிகளுக்கு ரூபாய் 4 கோடி செலவில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இப்படி திமுகவானது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்கள் உள்ளிட்ட விழிம்பு நிலை மக்ளுக்கான இயக்கமாகும். சாத்தனூர் அணையின் உபரி நீரை நந்தன் கால்வாயில் இணைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் கோரிக்கையை ஏற்று ரூபாய் 304 கோடியில் நந்தன் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும்..
தமிழ்நாட்டிலேயே விழுப்புரம் மாவட்டத்தில் தான் அதிக அளவு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நிதி ஒன்று தான் தடையாக இருக்கிறது. எனினும் நிதி இல்லை என புலம்பாமல் மக்கள் குறைகளை நீக்கும் அரசாக இருக்கிறது. எதிர்க்கட்சியினர் குறைகளை மட்டும் சொல்கின்றனர். ஆனால், அவர்கள் கூறுவது படி ஆட்சியில் குறையில்லை. அவர்கள் சிந்தனையில் தான் கோளாறு உள்ளது. மக்களுக்கு நல்லது நடந்தால் அவர்களுக்கு பிடிக்காது.
நம்பர் ஒன் முதலமைச்சர் என்பதை விட நம்பர் ஒன் தமிழ்நாடு என்ற பெயரைப் பெற வேண்டும் என்று தான் ஆட்சி செய்து வருகின்றோம். அனைத்துத் துறை, அனைத்து சமூகம், அனைத்து மாவட்டமும் வளர்ச்சி பெறவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உருவாக்கி வருகின்றோம். திராவிடமாடல் ஆட்சிதான் இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தது. பெண் விடுதலைக்கு போராடியது. பெண்களை படிக்க வைத்தது. கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றை உருவக்கியது. திராவிடம் தான் நவீன தமிழ்நாட்டை உருவாக்கி உள்ளது. திராவிடம் இருப்பதால் தான் பிற்போக்கு கும்பலால் தலை தூக்க முடியவில்லை. போலிகள், துணை கொண்டு இந்த ஆட்சி மீது தாக்குதல் நடத்துகின்றன," என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.