கடலூர்: சிதம்பரத்தில் நடைபெற்ற 20-ஆம் நூற்றாண்டின் சிறந்த ஆன்மிக தலைவரும் சமூக சீர்திருத்தவாதியுமான சுவாமி ஏ.எஸ்.சகஜானந்தர் அடிகளாரின் 135-ஆவது பிறந்தநாள் விழா அண்ணாமலை நகரில் உள்ள பொன்மணி அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி சிறப்பு விருந்துநராக கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், ஒரு பக்கம் கடவுள் இல்லை என்றார் கார்ல் மார்க்ஸ்; அதே நேரத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் இந்தியாவில் உள்ள சமூக கலாச்சாரங்களை சீர்குலைக்க சொன்னார். மறுபுறம் கிறிஸ்தவ மிஷனரிகள் தங்கள் வேலையை காண்பித்தன. இப்படி இரண்டு வலிமையான சக்திகள் இந்திய சமூகத்தை சீர்குலைத்தன என்று குறிப்பிட்டார்.
மேலும், ஒன்றாக உண்டு மகிழ்ந்து இருந்த மக்கள் மத்தியில் சமூகப் பிளவை ஏற்படுத்தியது பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தான் எனக் குற்றஞ்சாட்டினார்.
நிகழ்ச்சியில் தமிழில் வணக்கம் கூறி தனது உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கினார். இந்த விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தமிழில் பேசினார். இந்த மண் சிவனின் மண். சகஜானந்தாவின் 135 வது பிறந்த நாளில் அவரின் பாதம் தொட்டு பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சுவாமி சகஜானந்தா இறை வழி வந்தவர் என்று புகழுரைத்தார்.
இருபெரும் சக்திகள்
தொடர்ந்து பேசிய அவர், “சுவாமி சகஜானந்தா இந்த மண்ணில் தோன்றிய போது இரண்டு பெரிய சக்திகளை அவர் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. கடவுள் இல்லை. நமது கடவுளை தவறாக விமர்சிக்கும் சக்தியாக ஒரு சக்தி இருந்தது. 1852 ஆம் ஆண்டு காரல்மார்க்ஸ் அமெரிக்க பத்திரிகையில் எழுதி இருந்தார். இந்த இந்திய கலாச்சாரம் என்பது இந்து சமூகத்தினால் ஒன்றிணைக்கப்பட்டு உள்ளது. அதை அழித்து ஒழித்தால் மட்டுமே நாம் அங்கே உள்நுழைய முடியும் என்று எழுதி இருந்தார்.
இதையும் படிங்க: '2026 தேர்தலுக்குப் பிறகு பாஜக-வின் கொத்தடிமையாக திமுக இருக்கும்' - அதிமுக ஜெயக்குமார்! |
பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் காரல் மார்க்ஸ் கூறியது, இந்திய கலாச்சாரத்தை நாம் முற்றிலுமாக அழித்து வைத்தால் மட்டுமே அங்கே நாம் உள் நுழைந்து ஆட்சி புரிய முடியும் என்று கூறியிருந்தார். இன்னொரு சக்தியானது எங்கள் கடவுள் தான் புனிதமானவர் என்றும், அதனால் மதமாற்றம் இங்கு நடந்தது.
கிறிஸ்தவ மிஷனரிகள்
எங்கள் கடவுள் புனிதமானவர் என்று கிறிஸ்தவ மிஷனரிகள் தங்களது மதத்திற்கு மாற்றினார்கள். இந்த இரண்டு வலிமையான சக்திகளும் பிரிட்டிஷ் அரசாங்கம் மூலம் நமது கலாச்சாரம், நமது பண்பாட்டினை சீரழிப்பதை மட்டுமே முக்கிய குறிக்கோளாக கொண்டனர். நம்மில் பல பேருக்கு விழிப்புணர்வு இல்லை. பிரிட்டிஷ் அரசாங்கம் நம்மை ஆள்வதற்கு முன்பு நமது மக்களும், கலாச்சாரமும் எப்படி இருந்தார்கள் என்பது குறித்து நம்மில் பல பேருக்கு தெரியவில்லை.
அதனையும் நாம் ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும். பட்டியல் சமூக மக்கள் போற்றப்படக்கூடிய மக்கள். ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் ஆள வந்த பிறகு அவர்கள் பட்டியல் சமூக மக்களை எப்படி உபயோகப்படுத்தினார்கள் என ஆராய்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
பிரிட்டிஷ் சூழ்ச்சி
பிரிட்டிஷ் அரசாங்கம் 200 ஆண்டுகளுக்கு முன்பே மூன்று ஆளுநரை நியமித்து, நமது கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றை ஆராய்ந்து அதிலிருந்து ஒரு அறிக்கையை எடுத்து அதன் மூலம் தங்களது பணிகளை துவக்கினார்கள். அன்றைய சென்னை மாகாணத்தில் சென்னை மாகாண கவர்னர், 16 கலெக்டர்களை வைத்து அவர்கள் மூலம் தெளிவான அறிக்கையை தயாரித்து பணிகளை முன்னெடுத்து தொடங்கினார்கள்.
இதையும் படிங்க: ஈரோடு இடைத்தேர்தல்: பண மாலையுடன் வந்த சுயேட்சை வேட்பாளர்; திமுக மீது பகீர் குற்றச்சாட்டு! |
அப்போதெல்லாம் கடலூர் மாவட்டம் கிடையாது. வட ஆற்காடு, தென்னாற்காடு என மாவட்டங்கள் இருந்தன. கிராமம் தோறும் அவர்கள் ஆய்வு செய்து, எத்தனை பள்ளிக்கூடங்கள் இருக்கிறது? எத்தனை கல்வி நிறுவனங்கள் இருக்கிறது? இவற்றை யார் வழி நடத்துகிறார்கள்? இந்த பள்ளிகளில் எந்தெந்த சமூகத்தினர் படிக்கிறார்கள்? என கணக்கெடுத்தார்கள். அந்த அறிக்கையின்படி பட்டியல் சமூகத்தினர் அதிகமாக படித்தார்கள் என்பதை நான் உங்களுக்கு கூற விரும்புகிறேன்.
பியூட்டிஃபுல் ட்ரீ புத்தகம்
ஆற்காடு மாவட்டம் குறித்து பியூட்டிஃபுல் ட்ரீ என்ற நூலில் அவர்கள் தயாரித்திருந்தார்கள். அதை இப்போது இணையதளத்தில் சென்று எடுத்து படித்து பாருங்கள். அந்த நூலில் எத்தனை கிராமங்களில் பள்ளிக்கூடம் இருந்தது என்று பாருங்கள். அந்த காலத்தில் தான் தீண்டாமை கொடுமை இருந்தது என்பதை அந்த நூலை படித்தால் தெரியும்.
அந்தப் பெயரை ஏன் தேர்ந்து எடுத்தார்கள் என்றால், மகாத்மா காந்தி, பிரிட்டிஷ் அரசாங்கம் பரவுவதற்கு முன்பு எவ்வளவு அழகான மரமாக இருந்தோம். நீங்கள் வந்த பிறகு தான் கிளைகளை, வேர்களை அழித்து விட்டீர்கள் என்று கூறினார்கள். அதனால்தான் அந்த நூலுக்கு அந்த பெயர் வைக்கப்பட்டது.
கீழ் வெண்மணி
கீழ் வெண்மணியில் 48 பட்டியல் சமூக மக்கள் கொல்லப்பட்டார்கள். 57 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த கிராமத்திற்கு கடந்த ஆண்டு நான் சென்று பார்த்தேன். அங்கு ஒரு வீடு கூட சரியான வீடாக இல்லை. பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகளை கட்டுவதற்கு கூட அங்கு சரியான ஆட்கள் இல்லை.
ஆனால் அங்கு ஒரு நினைவுத் தூணை வைத்து அதற்கு கோடிக்கணக்கில் செலவு செய்கிறார்கள். அடித்தட்டு மக்கள் வறுமையில் இருக்க வேண்டும் என்று இங்கு இருப்பவர்கள் நினைக்கிறார்கள். அதை அங்கு சென்ற பிறகுதான் நான் பார்க்க நேரிட்டது.
இப்படிப்பட்ட சூழலில் இரண்டு பெரிய சக்திகளை ஒதுக்கி வைத்து சகஜானந்தா அவர்கள் கல்வி மூலம் தான் இந்த சமுதாயத்தை உயர்த்த முடியும் என்ற நம்பிக்கையோடு நந்தனார் கல்விக் கழகத்தை உருவாக்கினார். கலாச்சாரத்தை பாதுகாக்க முடியும் என கல்வி மூலம் முன்னெடுத்தார்கள். சுதந்திரத்திற்கு பிறகு மூன்றாவது ஒரு தீய சக்தி வந்தது.
அது எங்கள் கடவுளை வணங்க வேண்டும் என்று கூறியது. பட்டியல் சமூகத்து ஊராட்சி தலைவர்களுக்கு நாற்காலி கொடுப்பதில்லை. கிராமங்களில் காலணி கூட அணிந்து கொண்டு செல்ல முடியவில்லை. குழந்தைகளை தனிமைப்படுத்துகிறார்கள். அதுபோன்ற ஒரு சூழ்நிலை தான் சுதந்திரம் பெற்ற பிறகும் இருந்தது. தற்போதும் இருந்து வருகிறது.
பட்டியலினத்தில் இருந்து முதலமைச்சர்
சகஜானந்தா இந்த மண்ணில் சமூக செயற்பாட்டாளராகவும், கல்வியாளராகவும் இருந்திருக்கிறார். கேரளாவில் சமூகப் புரட்சி ஏற்பட்டிருக்கிறது. எளியவர் கூட முதலமைச்சராக முடியும். இங்கு அந்த வாய்ப்பு இல்லாமல் இருந்ததால், இங்கே கல்வி மூலம் மாற்றத்தை கொண்டு வர சுவாமி சகஜானந்தா பாடுபட்டார்.
பட்டியல் சமூகத்து மக்களை அரசியல் காரணங்களுக்காக 200 பிரிவுகளுக்கு மேலாக பிரித்து வைத்துள்ளனர். நாம் அவர்களை ஒன்றிணைக்க வேண்டும். சுவாமி சகஜானந்தாவின் கனவை நனவாக்க வேண்டும். பட்டியல் சமூகத்தில் இருந்து ஒரு முதலமைச்சர், விஞ்ஞானி போன்றோரை எப்போது நான் பார்க்க போகிறேன்? பட்டியல் சமூகம் வளர்ந்துள்ளது என்பதை நெஞ்சை நிமிர்த்தி சொல்ல வேண்டும்.
இதையும் படிங்க: சுத்தம் பத்தல; தூத்துக்குடி 20 ரூபாய் பிரியாணி கடைக்கு சீல்? |
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு அடுத்த துணைவேந்தர் வரும்போது சுவாமி சகஜானந்தா பெயரில் ஒரு இருக்கை அமைக்கப்படும் என நான் இங்கு உறுதியளிக்கிறேன்,” எனப் பேசினார்.
இதையடுத்து சிதம்பரத்தில் உள்ள அரசு நந்தனார் ஆண்கள் பள்ளி விடுதிக்கு சென்ற ஆளுநர் ஆர்.என். ரவி, அங்கு மாணவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர்களுடன் அமர்ந்து மதிய உணவை சுவைத்தார்.