சென்னை: கடந்த 2011- 2015ஆம் ஆண்டுகளில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறையும் மற்றொரு வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் 2,222 பேர் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர். இதில், அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து ஆஜராகி வந்த நிலையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 2,222 பேரில் கடந்த ஜனவரி 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 150 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு அவர்கள் ஆஜராகி வந்தனர்.
இந்த வழக்கு இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகி இருந்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில், வழக்கு தொடர்பான பெண் டிரைவ், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட டிஜிட்டல் வழக்கு ஆவணங்களின் நகல்களை தங்களுக்கு வழங்கக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் கேட்டிருப்பதாகவும் அதுவரை, வழக்கில் சாட்சியாக உள்ள தடய அறிவியல் துறையின் கணிணிப் பிரிவு உதவி இயக்குநர் மணிவண்ணிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த கூடாது என தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: பாஜக ஆதரவில்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது! தமிழிசை செளந்தரராஜன் பேட்டி! - TAMILISAI SOUNDARARAJAN
அப்போது அமலாக்கத்துறை தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ் ஆஜராகி, தடய அறிவியல் கணினிப் பிரிவு உதவி இயக்குநரை தவிர்த்து விட்டு, மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு அனுமதியளித்த நீதிபதி கார்த்திகேயன், வழக்கின் விசாரணையை பிப்ரவரி 6ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.