மயிலாடுதுறை மாவட்டம் அருகே உள்ள கிளியனூர் பகுதியைச் சேர்ந்த சங்கரின் மகன் விஜயசெல்வன்(24). இவர் டிப்ளமோ எலக்ட்ரானிக்கல் பிரிவில் பட்டம் பெற்றுள்ளார். இவர் வேலை தேடிக்கொண்டிருந்தபோது காதல் வலையில் விழுந்துள்ளார். தொடர்ந்து காதலி வீட்டிற்கு இவர்களது காதல் விவகாரம் தெரியவே, திருமணத்திற்கு அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விஜயசெல்வன் விரக்தியில் இருந்துள்ளார்.
இந்நேரத்தில் தனது காதலி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதைக் கேள்விப்பட்ட விஜயசெல்வன் நேற்றிரவு (நவ.14) விஷத்தைக் குடித்து வீட்டிலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை உறவினர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவர்கள் போராடியும் விஜயசெல்வன் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
தொடர்ந்து மருத்துவமனையில் முறையாகச் சிகிச்சை அளிக்கவில்லை என குற்றம் சாட்டி விஜயசெல்வனின் உறவினர்கள் ரகளையில் ஈடுபட்டனர். அப்போது பணியிலிருந்த தற்காலிக செவிலியர் கீர்த்திகா என்பவரை, விஜயசெல்வனின் உறவினர்கள் தாக்கி கணினி மற்றும் ஈசிஜி இயந்திரத்தைச் சேதப்படுத்தினர். இதுகுறித்து செவிலியர் கீர்த்திகா மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, காவல் துறையினர் மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்ட விஜயசெல்வனின் சகோதரர் வீரபாண்டி, சகோதரி சங்கீதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.