மயிலாடுதுறை: விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் சீர்காழியிலிருந்து தரங்கம்பாடி வரை 4 வழிச்சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட குடியிருப்பு இடம், விவசாய நிலம் ஆகியவற்றின் உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என கடந்த 2 ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வருகிறது.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் உரிய இழப்பீடு பெற்று தர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் தரங்கம்பாடி தாலுகா பூந்தாழை கிராமத்தில் நேற்று (ஜூலை29) 4 வழிச்சாலை அமைக்கும் பணியை ஜேசிபி வாகனம் கொண்டு மேற்கொண்ட போது, இழப்பீடு வழங்கிய பின் பணியைத் தொடங்குங்கள் என்று கூறி பாதிக்கப்பட்டவர்கள் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த தரங்கம்பாடி தாசில்தார் புனிதா மற்றும் டிஎஸ்பிக்கள் பழனிசாமி, வசந்த ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு ஏற்படாததால் பாதிக்கப்பட்டவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்தனர். இதனால் சிதம்பரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் மருத்துவர்கள் தர்ணா... நோயாளிகள் அவதி!