மயிலாடுதுறை: சீர்காழி அருகே புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். இவர் அஸ்ஸாமில் இந்திய விமானப்படையில் பணியாற்றிவருகிறார். இவரது மனைவி யாமினி, இவர்களுக்கு அகரமுதல்வன் என்ற இரண்டு வயது குழந்தை உள்ளது. குழந்தை எட்டு மாதத்திலேயே பெற்றோர்கள் கூறும் பொருளை நன்கு ஞாபகம் வைத்துக்கொண்டு மீண்டும் கேட்கும்போது மறக்காமல் மழலை மொழியில் கூறுவாராம்.
குழந்தையின் இந்த திறனை அறிந்த ஜெகதீஸ்வரன் - யாமினி தம்பதியினர் குழந்தையின் தனித்திறமையினை மேலும் மெருகேற்ற தினமும் பயிற்சியளித்தனர். சிறு பயிற்சியும் அவ்வப்போது வழங்கியுள்ளனர். விளையாடும்போதும், குழந்தையுடன் சேர்ந்து பெற்றோரும் நேரம் ஒதுக்கி விளையாடுவார்களாம்.
இவ்வாறு குழந்தையின் இந்த திறமையை ’கலாம்’ உலக சாதனை குழுமத்திற்கு எடுத்துச்சென்றுள்ளனர், குழந்தையின் பெற்றோர். குழந்தையின் தனித்திறமையை குழுமத்தின் அறிவுறுத்தல்படி வீடியோவாக எடுத்து அனுப்பியுள்ளனர். அவ்வாறு அகரமுதல்வன், திருக்குறள் 3, தமிழ் உயிர் எழுத்துகள், வாரங்கள் & மாதங்கள், எண்கள் (தமிழ், ஆங்கிலம், ஹிந்தி), தமிழில் எண்கள் 1 முதல் 100 வரை,
தேசிய தலைவர்கள், பல்வேறு நாடுகளின் தேசிய கொடிகள், சமையல் பொருட்கள்,உபகரணங்கள், படிப்பு உபரணங்கள், ஃபிளாஷ் கார்டுஸ், ரைம்ஸ், பறவைகள், வாகனங்கள், விலங்குகள், பழங்கள், காய்கறிகள், உடல் உறுப்புகள் என்று கிட்டத்தட்ட 1000 எண்ணிக்கை வரை கூறி, ’கலாம்’ உலக சாதனையில் இரண்டு வயதுக்குள் இடம்பெற்றுவிட்டார்.
இவரின் திறமையை அங்கீகரித்து எளிதில் கிரகித்து புரிந்து உணர்ந்து கொள்ளும் திறமையுள்ள அசாதாரணமான ’மேதகு குழந்தை’ என்ற பட்டத்தையும், பதக்கங்களையும் வழங்கி உலக சாதனையாக பதிவு செய்து அங்கீகரித்து கௌரவித்துள்ளது.
இதையும் படிங்க: பொதிகைச்சோலை: இயற்கை வேளாண்மைக்கு உயிர் கொடுக்கும் கூட்டுறவுப் பண்ணையம்