நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை நகரில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடுபோவதாக மயிலாடுதுறை காவல் துறையினருக்கு புகார்கள் வந்தவண்ணம் இருந்துள்ளது. இது குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சித்தர்க்காடு பகுதியில் ஆய்வாளர் சிங்காரவேலுவின் தலைமையில் காவல் துறையினர் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை நிறுத்தி சோதனைசெய்ததில் அவரிடம் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை என்று தெரியவந்தது.
இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப்பின் முரணான பதில் கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் பெருந்தோட்டத்தைச் சேர்ந்த சுந்தர்(23) என்பது தெரியவந்தது. மேலும், அவர் மயிலாடுதுறை, பெரம்பூர் பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடியதை ஒப்புக்கொண்டார்.
திருடிய 12 இருசக்கர வாகனங்களும் சித்தர்க்காடு காவிரி ஆற்றங்கரையில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் சுந்தரை கைது செய்தனர்.
அவரிடமிருந்த பறிமுதல் செய்த 12 இருசக்கர வாகனங்களும் ஸ்ப்ளன்டர் நிறுவனத்தைச் சேர்ந்தது என்பதைக் கண்ட காவல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர். இந்த வாகனத்தை கள்ளச்சாவி மூலம் எளிதாக திருடிவிடலாம் என்பதாலும் இந்த இருசக்கர வாகங்களுக்கு ரீவெல்யூ உள்ளதாலும் இதனைத் தேர்ந்தெடுத்து திருடியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: உல்லாசமாக வாழ திருட்டில் ஈடுபட்ட காதல் ஜோடி.!