நாகப்பட்டினம்: திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பதருன்னிசா (72). இவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மலேசியாவின் கோலாலம்பூர் செல்வதற்காக இன்று (ஏப்.15) காலை வாடகை காரில் சென்று கொண்டிருந்தார். அதேப் பகுதியை சேர்ந்த கிருஷ்ணசந்தர் (44) என்பவர் காரை ஓட்டிச் சென்ற நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகேவுள்ள நடராஜ பிள்ளைச்சாவடி அடுத்த ஆலங்காடு பகுதியில் சாலையோரம் காரை நிறுத்தியுள்ளனர்.
அப்போது, சீர்காழி நோக்கி சென்றுகொண்டிருந்த டாரஸ் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் ஓரமாக நின்றுகொண்டிருந்த காரின் மீது மோதியது. இதில், லாரியின் சக்கரத்தில் சிக்கிய கார், சில அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் காரின் மீது லாரி ஏறி நின்றது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த பதருன்னிசா, கிருஷ்ணசந்தர் அகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறை, தீயணைப்புத் துறையினர் காரில் சிக்கிய இருவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
பல மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு இருவரது உடல்களை மீட்ட காவல் துறையினர், உடற்கூராய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த திருவெண்காடு காவல் துறையினர், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருவாரூரில் நடைபெற்ற விதவைகள் மறுமண சந்திப்பு நிகழ்ச்சி