நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 2007ஆம் ஆண்டு முதல் பாதாளச் சாக்கடை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாகவும் முறையான பராமரிப்பு செய்யாததாலும் நகரம் முழுவதும் சாக்கடை நீர் வழிந்தோடுகிறது எனப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், பாதாளச் சாக்கடையில் கழிவுநீர் செல்ல வழியின்றி, பல்வேறு இடங்களில் உடைத்துக்கொண்டு, வாய்க்கால்கள், குளங்கள், காவிரி ஆற்றில் கலந்துவருகின்றது. இதன் காரணமாக மயிலாடுதுறை பிரதான சாலைகளில் 10 முறைக்கு மேல் பாதாளச் சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு, 15 அடி ஆழத்திற்கு சாலை உள்வாங்கியுள்ளது.
மயிலாடுதுறையில் கனரக வாகனங்கள் செல்லும்போது, சாலைகள் உடைந்துவிடுவதால், உயிருக்கு உத்தரவாதமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கழிவுநீர் நிலத்தடி நீர்நிலைகளில் கலக்கின்றன. இதனால், பொதுமக்கள் பல்வேறு தொற்றுநோய்களுக்கு ஆளாகியுள்ளளனர். இதனிடையே, கொசுத்தொல்லை அதிகரித்து காணப்படுகின்றது.
எனவே பாதாளச் சாக்கடை, குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி சேம்பர் ஆஃப் காமர்ஸ் சார்பில் வர்த்தகர்கள், மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தமிழ்நாடு அரசு, நகராட்சி நிர்வாகம் ஆகியவற்றை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: