மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்திற்குள்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. கடந்த 2019ஆம் ஆண்டு சிறுமியின் உறவினரான மேலப்போலகம் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் திருமணம் செய்துகொள்வதாகக்கூறி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று தங்கவைத்துள்ளார்.
அங்கு சிறுமியைப் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய இளைஞர், சிறுமியை திருமணம் செய்துகொள்ளாமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதைத் தொடர்ந்து சிறுமி அங்கிருந்து புறப்பட்டு மயிலாடுதுறை சித்தர்காட்டிலுள்ள தனது பாட்டி வீட்டிற்குச் சென்று தங்கியுள்ளார்.
இதையடுத்து, அங்கு மயிலாடுதுறை நகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றும் மாப்படுகை, கங்கைநகரைச் சேர்ந்த ஒருவர் அச்சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார்.
அதன்பின், மங்கைநல்லூரில் சிறுமிக்கு அண்ணன் முறையாகும் நபர் சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். இதன்பின், மங்கைநல்லூரிலுள்ள ஒரு உணவகத்தில் வேலை பார்த்துவந்த சிறுமிக்கு நேற்று முன்தினம் (ஏப். 23) வயிற்றுவலி ஏற்படுள்ளது.
இதையடுத்து, மருத்துவமனைக்குச் சென்ற சிறுமியை மருத்துவர்கள் பரிசோதித்ததில் மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து காவல் நிலையத்திற்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.
பின்னர், மருத்துவமனை வந்த காவல் துறையினரிடம் சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய மூவரையும் போக்சோ சட்டத்தில் கைதுசெய்த காவல் துறையினர் அவர்களைச் சிறையில் அடைத்தனர்.