நாகை மாவட்டம், சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு நடராஜன் (45). இவர், அதே பகுதியில் உள்ள பழமைவாய்ந்த முருகன் கோவிலில் குருக்களாக இருந்துவந்தார். கொண்டல் முருகன் கோவிலில், கடந்த பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இதுதொடர்பாக சீர்காழி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். சிலை திருடப்பட்ட நாளிலிருந்து குருக்கள் பாபு நடராஜன் மன வருத்தத்தில் இருந்ததாகவும், காவல்துறையினர் சிலை திருட்டு வழக்கில் அவரை அடிக்கடி விசாரணைக்கு அழைத்தது மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும், இதன் காரணமாக விஷமருந்தி தற்கொலை செய்திருக்கலாம் என, அவரது மனைவி துர்க்கா புகார் அளித்துள்ளார்.
கொண்டல் அருகே குமாரகுடி கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் கிடந்த பாபு நடராஜனின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பாபு நடராஜன் மனைவி அளித்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த கொண்டல் காவல்துறையினர் சிலை திருட்டு வழக்கில் நடராஜனுக்கு தொடர்புள்ளதா அல்லது காவல்துறையினர் அடிக்கடி விசாரணைக்கு அழைத்ததால் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் பார்க்க: ஊரடங்கை மீறிய எம்.எல்.ஏ.வுக்குப் பிணை!