வங்க கடலின் மேற்கு திசையில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது அடுத்த 24 மணி நேரத்திற்குள் உயர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக விசாகப்பட்டினம் நராஸ்பூர் இடையே கரையைக் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புயல் எச்சரிக்கை சின்னமான ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நாகை துறைமுகத்தில் ஏற்றப்பட்டுள்ளது. இது புயல் உருவாகக்கூடிய திடீர் காற்றோடு கூடிய மழை பெய்யும் வானிலையைக் குறிக்கும் ஒன்றாகும்.
மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் வேதாரண்யம் தாலுக்காவில் கடல்சீற்றம் காரணமாக அப்பகுதி மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி சிதம்பரனார் துறைமுகத்திலும் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. முன்னதாக அதிக கடல் சீற்றம் காரணமாக 10.10.2020 முதல் 13.10. 2020 வரை நான்கு நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத் துறையின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் ராமசாமி: அவர் யார் தெரியுமா?