தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு சட்டத்தின்படி மாணவர்களை ஆசிரியர்கள் எந்த காரணத்துக்காகவும் பிரம்பால் அடிக்கக்கூடாது. உடல், மனரீதியாகத் துன்புறுத்தும் வகையில் எந்தவித தண்டனையும் வழங்கப்படக்கூடாது. குறிப்பாக, உடற்கல்வி ஆசிரியர்கள் பிரம்பு கம்புகள், சாட்டைகள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தவறு செய்யும் மாணவர்களை அழைத்து "கவுன்சிலிங்” கொடுத்து நல்வழிப்படுத்த வேண்டும்.
இதை மீறும் ஆசிரியர் மீது மாணவர்கள் புகார் அளித்தால், அந்த ஆசிரியருக்குச் சிறைத் தண்டனை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாகை மாவட்டம், சீர்காழியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியின் இந்த விதிமீறல் தொடர்ந்து நடைபெற்று வருவதாகப் பெற்றோர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
பள்ளியின் ஹாக்கி விளையாட்டு உடற்கல்வி ஆசிரியராக முரளி என்ற ஆசிரியர் தொடர்ந்து பல மாணவர்களைப் பிரம்பு கொண்டும், கையில் கிடைத்த சில பொருட்களைக் கொண்டும் தாக்கி வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வேறு பள்ளியிலிருந்து அந்தப் பள்ளிக்கு புதியதாகச் சேர்ந்த ஒரு மாணவனைப் பள்ளியிலே வணக்க வழிபாட்டில் சரியாக நிற்கவில்லை என்று கூறி பிரம்பால் கடுமையாகக் காலில் தாக்கிய சம்பவம் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களைத் தாக்கும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மாணவர்கள் அச்சமின்றி மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் தங்கள் கல்வியினைத் தொடர முடியும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.