வேலூர்: வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையில் ஆரம்பித்து தொடர்ந்து மூன்று மாதங்களாக மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் எருது விடும் விழா நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் எருது விடும் விழா நடைபெறும். இம்முறை வேலூர் மாவட்டத்தில் 80 கிராமங்களில் எருது விழாவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்விழா நடத்த போடப்பட்டுள்ள நிபந்தனைகள் கட்டுப்பாடுகள் இம்முறை கடுமையாக உள்ளதால் பலர் போட்டியை நடத்த முன்வரவில்லை.
ஒரு கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் செய்ய வேண்டும், 5 லட்ச ரூபாய் முன்பணம் என எருது ஓடும் பாதையில் இளைஞர்கள் இருக்கக் கூடாது, எருது ஓடும் பாதை முழுவதும் இரும்பு வேலி அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விழா நடைபெறும் இடத்தில் இளைஞர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்துகின்றனர். இந்த நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் பழைய முறையை பின்பற்ற வேண்டும் என எருது விடுவோர் பாதுகாப்பு சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் காட்பாடி காந்தி நகர் பகுதியில் உள்ள அமைச்சர் துரைமுருகன் இல்லத்திற்கு வந்து அவரிடம் இது குறித்து மனு அளித்தனர்.
உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார். பின்னர் அவர் செய்தியாளரிடம் கூறியதாவது:
பொதுவாகவே பிராணிகள் வகைச் சட்டம் குறித்து பல பேர் எருதுகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது எனக் கூறி சட்டம் போட்டார்கள். அதன் பின்பு நான் பாரம்பரிய விளையாட்டுகளை நடத்தலாம் என அனுமதி வாங்கி கொடுத்தேன். வேலூரில் தற்போது தேவையில்லாமல் சட்டம் ஒழுங்கை கிரியேட் செய்கிறார்கள். அருகில் உள்ள திருப்பத்தூர் மாவட்டத்திலும் திருவண்ணாமலை மாவட்டத்திலும் தட்டிகள் கட்டாமல் மாடு விடுகிறார்கள். காலாகாலமாக நடத்தப்பட்டு ஒருவதை மாற்றுவது நல்லதல்ல என்பது தான் என்னுடைய கணக்கும். எனவே இது குறித்து உடனடியாக மாவட்ட ஆட்சியரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
இரும்பு தமிழ்நாட்டில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது என முதலமைச்சர் சொன்னது நியாயம் என்பதால் பிரதமர் வாயை திறக்கவில்லை. பெரியார் குறித்து சீமான் தொடர்ந்து பேசி வருவது சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் முன்பு எப்படி இருந்தார்கள் தற்போது எப்படி மாறி உள்ளார்கள் என தெரிந்தும், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என பேசும் இப்படிப்பட்ட அறிவு ஜீவிகள் இந்த காலத்திலும் உள்ளார்கள்.
இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.