சேலம்: அம்மாபேட்டை காமராஜர் காலனியில் ஆத்தூர் மெயின் ரோட்டில் சிவகாமி திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தை வாடகைக்கு எடுத்து புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை என்ற அமைப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையை வேலூரைச் சேர்ந்த பாஜக முன்னாள் பிரமுகர் விஜயா பானு என்பவர் நடத்தி வருகிறார். இவர் சேலம் அம்மாபேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் தங்களது அறக்கட்டளையின் பணம் முதலீடு செய்தால் அதற்கு 2 மடங்கு தொகை தருவதாக ஆசை வார்த்தைகளை கூறி பணம் பெற்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ஏராளமானோர் சிவகாமி திருமண மண்டபத்திற்கு சென்று அறக்கட்டளை நிர்வாகத்திடம் பணம் முதலீடு செய்ய ஆரம்பித்தனர். ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஏராளமானோர் முதலீடு செய்தனர். ரூ. 1 லட்சம் முதலீடு செய்தவர்களுக்கு தொடக்கத்தில் மாதம் ரூ.17 ஆயிரம் வட்டி கொடுத்து வந்தனர். இதனை நம்பிய பொதுமக்கள் அறக்கட்டளையின் மேலும் முதலீடு செய்தனர்.
இந்த நிலையில் புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை, பொதுமக்களிடம் இருந்து பணத்தை வசூலித்து மோசடி செய்வதாக சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உதவி ஆணையர் வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் சித்ராதேவி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு பெற்றிருப்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் எந்த ஒரு அங்கீகாரமும் பெறாமல் பொது மக்களிடம் பணம் வசூலிப்பதும் தெரிய வந்தது.
நேற்று முன்தினம் மாலை அந்த திருமண மண்டபத்திற்கு சென்று போலீசார் சோதனை செய்தனர். அப்போது விஜயா பானு மற்றும் ஊழியர்கள் போலீசாரின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சோதனையிட வந்த போலீசாரை அறக்கட்டளை சேர்ந்தவர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரின் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் வேல்முருகன் தலைமையில் நூறுக்கும் மேற்பட்ட போலீசார் அந்த திருமண மண்டபம் முன் குவிக்கப்பட்டனர்.
பிறகு அங்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து திருமண மண்டபம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து விஜயா பானு அவருடைய உதவியாளர்கள் என 15 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.12 கோடி ரொக்கம், 2.50 கிலோ தங்க நகை, 10 கிலோ வெள்ளி, 200 மூட்டை அரிசி, 200 மூட்டைகளில் இருந்த மளிகை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். சேலத்தையே அதிர வைத்த இந்த பண மோசடி விவகாரத்தை யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.