தேனி: தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது டாப் ஸ்டேஷன். இப்பகுதி முழுவதும் ஏலக்காய், தேயிலை, காப்பி தோட்டம் மற்றும் மிளகு போன்ற பணப்பயிர்கள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் பல்லாயிரம் ஏக்கர் வனப்பகுதியில் தடை செய்யப்பட்ட வனப்பகுதியாக வனத்துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சுமார் 26 பேர் தீயில் கருகி உயிரிழந்த நிலையில் இப்பகுதியில் சுற்றுலா அனுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக குரங்கணியில் இருந்து சாம்பலாறு வரை மினி ட்ரக்கிங் மட்டுமே தமிழ்நாடு அரசு அனுமதிக்கப்பட்டு வனத்துறை பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் டாப் ஸ்டேஷன் தமிழக எல்லைப் பகுதியில் உள்ள எல்லைப்பட்டி கிராமம் அருகே தடை செய்யப்பட்ட வனப்பகுதியில் அப்பகுதியில் உள்ள நபர்கள் சிலர் கூடாரங்கள் அமைத்து சட்டவிரோதமாக சுற்றுலாப் பயணிகளை அழைத்து வந்து தங்க வைத்து பணம் சம்பாதிப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அங்கு சென்று பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது. பல கூடாரங்கள் அமைக்கப்பட்டு அனைத்திற்கும் சோலார் பேனல்கள் நிறுவப்பட்டு மின்விளக்குகள், சீரியல் விளக்குகள், ஒலிபெருக்கிகள், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு ஹெலி கேம் வைஃபை கணிப்பொறி போன்ற நவீன உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக வனத்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் டாப் ஸ்டேஷன் எல்லைப்பட்டியைச் சேர்ந்த சின்னப்பன் என்பவர் கூடாரங்கள் அமைத்து சுற்றுலா பயணிகளை அழைத்து வந்து அவர்களுக்கு அனைத்து வசதியும் ஏற்படுத்தி தந்துள்ளதாக கூறப்படுகிறது.
வனதுறையினர் அங்கு செல்வதை கண்டு சின்னப்பன் மற்றும் முருகராஜ் சுரேந்திரன் ஆகிய மூன்று நபர்கள் தப்பி ஓடிய நிலையில் சின்னப்பனுடைய மகன் ரவீந்திரன் மட்டும் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டார். உடனடியாக கூடாரங்கள் பிரிக்கப்பட்டு அங்கிருந்த ஹெலிகேம், ஸ்பீக்கர்கள் ஜெனரேட்டர்கள் கூடாரம் தயாரிக்க பயன்படுத்தப்பட்டு உபகரணங்கள் சோலார் பேனல்கள் முயல் மற்றும் காடைகள் பிடிக்க வைக்கப்பட்ட கம்பிகள், நவீன கண்காணிப்பு கேமராக்கள் ஆடியோ வீடியோ உபகரணங்கள் கணிப்பொறி போன்ற கருவிகள் கைப்பற்றப்பட்டு வனத்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தப்பி ஓடிய மூவரையும் தற்போது காவல்துறை உதவியுடன் தேடி வருகின்றனர்.