திண்டுக்கல்: செம்பட்டி காவல் நிலையத்தில், நகை திருடு போன வழக்கில் விசாரணை என அழைத்துச் சென்று பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வு காவல் ஆய்வாளர் மற்றும் இரண்டு காவலர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள சேடப்பட்டியை சேர்ந்த ஒருவரது வீட்டில், கடந்த 2001-ல் நகை திருடு போனதாக செம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
அப்போது, திருடு போன வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் வசித்த கூலித்தொழிலியின் மனைவியை, கடந்த 2001 பிப்.20ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு விசாரணை செய்ய வேண்டுமெனக் கூறி, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பின்னர், காவல் ஆய்வாளர் ரெங்கசாமி மற்றும் காவலர்கள் வீரத்தேவர், சின்ன தேவர் ஆகியோர் காவல் நிலையத்தில் வைத்து அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதைத் தொடர்ந்து அன்று மாலையில் அவரை விடுவித்த போலீசார், விசாரணைக்கு அழைத்தால் மீண்டும் வர வேண்டும் எனக் கூறியதாகவும் கூறப்படுகிறது. அதனால் மனமுடைந்த அப்பெண் தற்கொலை முயற்சி செய்துள்ளார். ஆனால், அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்றியுள்ளனர்.
இதையும் படிங்க: அங்கன்வாடி குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை.. சத்தம் போட்டதால் கல்லால் தாக்கிய சிறுவன்!
அதனைத் தொடர்ந்து, அவரது கணவர் காவல் நிலையத்தில் மனைவிக்கு நடந்த கொடுமையைத் திண்டுக்கல் ஆர்.டி.ஓ-விடம் புகாராக அளித்த நிலையில், இவ்வழக்கில் 40 சாட்சிகளிடம் விசாரணை நடத்திய அதிகாரி திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பான வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நேற்று (பிப்.25) செவ்வாய்க்கிழமை நீதிபதி தீபா தீர்ப்பளித்தார்.
முன்னதாக அரசு தரப்பில், வழக்கறிஞர் சண்முகபார்த்தீபன் ஆஜராகினார். அதனைத் தொடர்ந்து, வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி தீபா, "ஒய்வு பெற்ற காவல் ஆய்வாளர் ரெங்கசாமி மற்றும் தற்போது பணியில் இருக்கும் காவலர்கள் வீரத்தேவர், சின்ன தேவர் ஆகிய மூன்று பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.36 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்னர் நீதி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.