கரோனா தொற்றுநோய் பாதிப்பு காரணமாக அத்தியாவசிய கடைகளுக்கு தமிழ்நாடு அரசு நேர கட்டுப்பாடு விதித்திருக்கிறது. இதன் காரணமாக யாரும் பசியோடு இருந்துவிடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில், புதுமையான முயற்சியில் இறங்கியுள்ளனர், மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள ஆர்.ஆர் கேக் கார்னர் நிறுவனத்தினர் .
கடை பணியாளர்கள் யாருமின்றி, தன்னுதவி திட்டத்தின் கீழ் 24 மணி நேரமும் பிரெட் பாக்கெட்டுகள் கிடைக்கும் வகையில் , அக்கடையின் முன் பிரட் பாக்கெட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு பிரெட் பாக்கெட்டின் விலை 30 ரூபாய் எனவும் அதற்குரிய பணத்தை அருகில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் வைத்துவிட்டு தங்களுக்கு தேவையான பாக்கெட்டுகளை எடுத்து செல்லலாம் என எழுதப்பட்டிருந்தது.
கடைக்கு வரும் பொதுமக்களும் தங்களுக்கு வேண்டிய பிரெட் பாக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு அதற்குரிய பணத்தை நேர்மையாக அப்பெட்டியில் போட்டுவிட்டு செல்கின்றனர்.
பணமில்லாதவர்கள் சிலர் பெட்டியில் பணம் போடாமலேயே பிரெட் பாக்கெட்டுகளை எடுத்து செல்வதைக்கூட நாங்கள் பொருட்படுத்துவது இல்லை என்கிறார் கடை உரிமையாளர் ஜெகநாதன்.
மயிலாடுதுறை பகுதியில் மக்களுக்கு பயன்படும் வகையில் ஆர்.ஆர். கேக் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள "நேர்மை கடை" அப்பகுதி மக்களின் பாராட்டை பெற்றுவருகிறது.
இதையும் படிங்க: அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் - மாவட்ட ஆட்சியர்