நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் 2007ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. பாதாள சாக்கடை திட்டம் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக பாதாள சாக்கடை குழாய் அடைப்பின் காரணமாக மயிலாடுதுறை பிரதான சாலைகளில் 14 முறை பள்ளம் ஏற்பட்டுள்ளது.
அண்மையில் கொத்த தெருவில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்வதில் தடங்கல் ஏற்பட்டு, கழிவு நீர் ஆள்நுழைவு தொட்டி வழியே வெளியேறி குடியிருப்பு பகுதிகள், பாசன வாய்க்கால்களில் கலந்துவருகிறது. இதனால், நகராட்சிக்குட்பட்ட 36ஆவது வார்டிலும் பாதாள சாக்கடை கழிவு நீர் வழிந்து ஓடுவதால் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது.
பிள்ளையார் தோட்டம், நான்காவது புதுத்தெரு குடியிருப்பு பகுதியில் வீட்டு வாசல்களின் முன்பு பாதாள சாக்கடை கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் குடியிருப்புவாசிகள் கடும் அவதிக்குள்ளாவதோடு வாந்தி, காய்ச்சல், தொற்று நோய் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். மேலும் குடிநீரில் பாதாள சாக்கடை கழிவு நீர் கலப்பதாக குற்றம்சாட்டுகின்றனர்.
மயிலாடுதுறை நகரமே பாதாள சாக்கடை கழிவு நீரில் மிதப்பதாகவும், இதுகுறித்து மயிலாடுதுறை நகராட்சி, மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை என்று குற்றம்சாட்டும் மக்கள், உடனடியாக தமிழ்நாடு அரசு மயிலாடுதுறையில் நிலவும் பாதாள சாக்கடை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிக்க: பார்த்தீனியச் செடிகளை அழிக்க விவசாயிகள் கையில் எடுத்த நூதனப் போராட்டம்!