இந்தியாவில் வாணிபம் செய்ய டென்மார்க் நாட்டினர் கப்பல் மூலம் இலங்கை வழியாக 1620-ஆம் ஆண்டு தரங்கம்பாடிக்கு வந்தனர். தரங்கம்பாடியில் டேனிஷ் கோட்டை, புது எருசலேம் ஆலயம் உள்ளிட்டவைகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர்.
டேனிஷ்காரர்கள் இறந்தால் கடற்கரை அருகே கல்லறை தோட்டம் அமைத்து அங்கு அடக்கம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். டென்மார்க் நாட்டினர் அங்குள்ள மாணவர்கள் இந்திய கலாசாரத்தை தெரிந்துகொள்ளவும், முன்னோர்கள் வாழ்ந்த இடங்களைப் பார்வையிடவும் ஆண்டுதோறும் தரங்கம்பாடிக்கு வருகை தருகின்றனர். டென்மார்க் நாட்டினர் தரங்கம்பாடிக்கு வருகை புரிந்ததன் 400-வது ஆண்டு விழா செப்டம்பர் மாதம் கொண்டாடப்பட உள்ளது.
அதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், இந்திய கலாசாரத்தை அறிந்துக் கொள்ளும் நோக்கில் டென்மார்க் நாட்டில் உள்ள 'வெஸ்ட்பின்ஸ் எப்டர் ஸ்கூல்' என்னும் பள்ளியில் படிக்கும் 14 முதல் 18 வயது வரை உள்ள 35 மாணவர்களும், எட்டு ஆசிரியர்களும், பள்ளியின் தலைமை ஆசிரியை மேரி கிளிட் தலைமையில் ஒரு வார பயணமாக தரங்கம்பாடிக்கு வந்துள்ளனர்.
டென்மார்க்கில் உள்ள 'டேனிஷ் தரங்கம்பாடி அமைப்பு', தரங்கம்பாடியில் இயங்கி வரும் இந்தியா-டென்மார்க் கலாசார மையம் ஆகியவை இணைந்து இந்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
இந்நிலையில், நேற்று டேனிஷ் கோட்டை பகுதி அருகே அமைந்துள்ள கல்லறைத் தோட்ட வளாகத்துக்குச் சென்ற டென்மார்க் மாணவர்கள் அங்கு தூய்மைப் பணி மேற்கொண்டதுடன் கல்லறைகளுக்கு வெள்ளை வர்ணம் பூசும் பணியிலும் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, டென்மார்க் நாட்டின் நினைவுச் சின்னங்கள் உள்ள பகுதிகளில் துப்புரவுப் பணி மேற்கொண்டனர். இது தவிர டேனிஷ் கோட்டை அருங்காட்சியகம், கடல்சார் அருங்காட்சியகம் உள்ளிட்ட பகுதிகளைஅந்த மாணவர்கள் பார்வையிட்டனர்.
இதையும் படிங்க : ஆழ்துளைக் கிணறு விவகாரம் - அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு