நாகப்பட்டினம்: தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை, தை முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகையும், உழவுக்குத் தோழனாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப் பொங்கலும், உற்றார் உறவினர்களைக் கண்டு ஆசி பெறுவதற்கான காணும் பொங்கல் எனவும் மூன்று நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் புதுப் பானையில் பொங்கல் இட்டு, அதை சூரியனுக்குப் படைத்து வணங்கி, இயற்கைக்கு நன்றி தெரிவிப்பர். இதற்காக பொங்கல் நாட்களில் புது மண்பானைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெறும். அந்த வகையில், நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த ராதாமங்கலம், வடக்காலத்தூர், காக்கழனி உள்ளிட்ட கிராமங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் பொங்கலுக்குத் தேவையான மண்பானை, அடுப்பு உள்ளிட்ட மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.
இதற்காக ஒரு மாதத்திற்கு முன்பே வயல்களில் இருந்து மண் எடுத்து வந்து, அதனை பக்குவப்படுத்தி பாண்டங்களைத் தயாரித்து, காய வைக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், நாகை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் இரவு பகலாக கனமழை கொட்டித் தீர்த்தது. மேலும், பகல் பொழுதுகளில் வெயில் இல்லாமல் மேக மூட்டத்துடனேயே காணப்படுகிறது.
இதனால் தயாரித்த மண்பாண்டங்களைக் காய வைக்க முடியாமலும், சூளையில் வைத்து சுட முடியாமலும் உள்ளது. எனவே, தயாரித்த பச்சை மண்பாண்டங்களைக் காய வைக்க முடியாமல், வீட்டுத் திண்ணை மற்றும் அறைகளில் அடுக்கி வைத்துள்ளனர். மேலும், சூளைக்குள் மழை நீர் புகுந்துள்ளதால், காய்ந்த மண்பாண்டங்களை சூளையில் வைத்து சுட முடியாமல் தவித்து வருகின்றனர்.
ஏற்கனவே தயாரித்த மண்பாண்டங்களை சுடும்போது கனமழை கொட்டியதால் அனைத்தும் நனைந்து, பானைகள் ஊறி உடைந்து நாசமானது. இதனால் தங்களுடைய உழைப்பு, பொருளாதாரம் என அனைத்தும் வீணாகி விட்டதாக வேதனை அடைந்துள்ளனர், மண்பாண்ட தொழிலாளர்கள். இது குறித்து மண்பாண்டத் தொழிலாளர்கள் கூறுகையில், "பொங்கல் பண்டிகை மட்டும்தான் எங்களுக்கு வருமானம் வரக்கூடிய பண்டிகை.
இதற்காக ஒரு மாத காலமாக மண்பாண்டம் தயாரிக்கும் பணிகளில், நாங்கள் குடும்பமாக ஈடுபட்டு வந்தோம். தற்போது பெய்த கனமழையால், தயாரித்த மண்பாண்டங்களை காய வைக்க முடியாமலும், காய்ந்த பாண்டங்களை சுட முடியாமலும் போய்விட்டது. மேலும், பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வார காலம் மட்டுமே உள்ளதால், இதற்கு மேல் காய வைத்து சுட்டு மண்பாண்டங்களைத் தயார் செய்ய முடியாது.
பானைகளை பொங்கல் நாளில் மட்டும்தான் எங்களால் விற்பனை செய்ய முடியும். அதை நம்பிதான் எங்கள் தொழில் மற்றும் பொருளாதாரம் இருக்கும். ஆனால், இந்த மழையால் எங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறி ஆகிவிட்டது" என வேதனை தெரிவித்தனர். மேலும், நகரம் மற்றும் அனைத்து பகுதிகளிலுமே பித்தளை, சில்வர் பானைகளுக்கு மாறி விட்டதால், தங்களுடைய தொழில் மிகவும் நலிவடைந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.
ஆகையால், தமிழக அரசு விவசாயம் போன்ற பயிர் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்குவது போல், மழையால் பாதிக்கப்பட்டுள்ள மண்பாண்டத் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!