மயிலாடுதுறை: கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக உபரி நீரானது தமிழ்நாட்டிற்கு திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அதிலிருந்து வெளியேற்றப்பட்ட நீர் கொள்ளிடம் ஆற்றை சென்றடைந்துள்ளது.
இந்த நீர் கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு அருகே கடலில் கலக்கிறது. கடந்த மூன்று தினங்களாக தண்ணீர் சென்று கொண்டிருக்கும் நிலையில், நாளுக்கு நாள் நீரின் அளவு அதிகரித்துக் கொண்டே இருந்தது. தற்போது கீழணைலிருந்து 2 லட்சத்து 8,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொள்ளிடம் வழியே செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் நீர் நிரம்பி, அருகில் உள்ள கிராமங்களை சூழ்ந்தது. இதனால் அங்கு வசிக்கும் மக்களை படகு மூலமாக மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எஞ்சியுள்ள மக்களையும் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஆற்றின் கரையோரம் அமைக்கப்பட்டுள்ள வடிகால்களில் உள்ள கதவணைகள் பழுதடைந்ததால் நீரின் அழுத்தம் தாங்காமல் கரையின் மறுபக்கம் உள்ள கிராமங்களிலும் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக ஆயிரம் ஏக்கருக்கு மேல், பருத்தி, சோளம், மரவள்ளி கிழங்கு, மலர் மற்றும் காய்கறி சாகுபடி, விளைநிலங்களும் சுற்றுவட்டார கிராமப்பகுதி சாலைகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
இதையும் படிங்க: திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி