நாகை மாவட்டம் சிக்கலில் பிரசித்தி பெற்ற வேல்நெடுங்கன்னியம்மன், நவநீதேஸ்வரசாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் உள்ள சிங்காரவேலர் அன்னை வேல்நெடுங்கன்னி அம்மனிடம் இருந்து வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்தபுராணம் கூறுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் தைப்பூசம் திருவிழா வெகு விமரிசியாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா கடந்த 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து நாள்தோறும் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சிங்காரவேலர் சுவாமிக்கு அபிஷேகமும், தீபாரதனையும் நடைபெற்றது. இதில் சுவாமிக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், மற்றும் நெய்யால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று மேளதாளம் வாத்தியங்கள் முழங்க வள்ளி, தெய்வானையுடன் சன்னதியில் இருந்து புறப்பட்ட சிங்காரவேலர், கோயிலில் உள்ள தெப்பக் குளத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் சிக்கல் சிங்காரவேலரை மனமுருக வேண்டி சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: வீனா கைகாட்டி மாரியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா