நாகை மாவட்டம், வேளாங்கன்னியில் உள்ள ஆரோக்கிய அன்னை மெடிக்கல்ஸ் என்ற மருந்தகத்தை ஆண்டனி ஜோஸப் ஜான்ஸன் என்பவர் நடத்தி வருகிறார். மேலும், சிறப்பு மருத்துவர் என்ற பெயரில் சித்த மருத்துவம் படித்த கீர்த்திகா என்பவர், இதே மருந்தகத்தில் கடந்த ஆறு மாத காலமாக கிளினிக் நடத்தி, நோயாளிகளுக்கு அலோபதி மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
இதுகுறித்து வந்த புகாரையடுத்து சுகாதாரத் துறை இணை இயக்குநர் (பொறுப்பு) மகேந்திரன் தலைமையில் மருத்துவர் குழுவினர் வேளாங்கன்னியில் உள்ள அந்த மருந்தகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கீர்த்திகா, நோயாளிகளுக்கு அலோபதி சிகிச்சை அளித்ததை குழுவினர் கண்டுபிடித்தனர். மேலும் ஆறு படுக்கைகள், ஈசிஜி கருவிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுடன் அம்மருந்தகத்தை சிறு மருத்துவமனைபோல செயல்படுத்தி வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து, மருந்தகத்தில் செயல்பட்டு வந்த கிளினிக்குக்கு சுகாதாரத் துறை இணை இயக்குநர் இன்று சீல் வைத்தார். பின்னர், இதுகுறித்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அருண்பதி வேளாங்கன்னி காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: +2 வரை படித்துவிட்டு மூன்று ஆண்டுகள் மருத்துவராகப் பணிபுரிந்த பெண் கைது!